செய்த தவறை மன்னிக்க எம்ஜிஆர் இல்லை இபிஎஸ்.. இந்த ஆட்டம் போதுமா கொழந்த.. நோட் பண்ணிக்கோங்க
அதிமுகவில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அறிவித்தார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சி தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதுதாெடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வேளை இது பாஜகவின் திட்டமாகத்தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் ஒரு பக்கம் கருத்து தெரிவித்திருந்தனர்.
செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கம்
இந்நிலையில், செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விவாகரம் அதிமுகவிற்கு உட்கட்சி பூசலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இபிஎஸ்-யின் நடவடிக்கையை கண்டித்து ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதிகாரத்தின் உச்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீீக்கப்பட்டதால் யாருக்கு பாதிப்பு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறு பக்கம் இபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர். 2026 தேர்தல் தொடங்க இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தொண்டர்களை பெரிதளவில் பாதிக்குமா என்பது குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.
இபிஎஸ் மாஸ்டர் பிளான் இதானா?
அதிமுகவின் எஃகு கோட்டை என்று சொல்லப்படும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதிதான் சொங்கோட்டையன் தொகுதியும் இருக்கிறது. எம்ஜிஆரின் விசுவாசியாகவும், ஜெயலலிதாவின் தொண்டனாகவும் அதிமுகவின் ஆலமரமாக செயல்பட்டவர் செங்கோட்டையன். இன்று முதல் அவர் கட்சியில் இல்லை என்பது அதிமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொண்டர்களுக்கு இது அதிருப்திதான். அதிமுக கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்டவே இபிஎஸ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஜெயலலிதாவிற்கு பின் இபிஎஸ் என்பதை நிறுவ முயற்சிக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2026 தேர்தல் கணக்கு என்ன?
இந்நிலையில் செங்கோட்டையனின் தீவிர தொண்டர்கள் 300 பேர் திடீரென அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ராஜினாமா செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பு இபிஎஸ் எதை எப்படி சரி செய்ய போகிறார் என்பதையும் தொண்டர்கள் கவனித்து வருகிறார்கள். அதிமுக என்ற கட்சியின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து மக்களின் முன்பு அம்பலப்படுத்துவதையே பாஜக விரும்புவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இபிஎஸ் இந்த சவால்களை எல்லாம் சரிகட்டி ஒரு தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் வீறு நடை போடுவாரா என்பது 2026 தேர்தலின் வாக்கு சதவீதமே சாட்சியாக அமையும் என்கின்றனர்.





















