GST Reform: முட்டல், மோதல் - ஜிஎஸ்டி திருத்தம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஓகே சொன்னது எப்படி?
GST Reform: ஜிஎஸ்டி வரி திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒப்புதல் அளித்தது எப்படி? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

GST Reform: ஜிஎஸ்டி வரி திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி திருத்தம்
ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அதில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சுதந்திர உரையின் போது பிரதமர் மோடி இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை இந்த விவகாரத்தில் ஒற்றை கருத்திற்கு கொண்டு வருவது என்பது மிகச் சிரமமானதாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் எளிதாகவே ஒப்புதலை பெற்று, புதிய ஜிஎஸ்டி வரி திருத்தத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியாளர்களின் சந்திப்பின்போது, அனைத்து மாநிலங்களும் ஒற்றைக் கருத்துடன் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார்.
முட்டல், மோதல்
வரி திருத்தம் தொடர்பாக இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள், கருத்து மோதல்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையால் மாநிலங்களின் வருவாய் குறையக்கூடும் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இதனால், மாலை 7 மணிக்கு முடிய வேண்டிய ஆலோசனைக் கூட்டம் இரவு 9.30 மணி வரை நீடித்துள்ளது.
அப்போது பேசிய நிதியமைச்சர், “ஜிஎஸ்டி வசூல் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சொந்தமானது. மாநிலங்கள் நஷ்டத்தை சந்தித்தால், மத்திய அரசும் பாதிக்கப்படும். ஆனால் சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, மாநிலங்களும் மத்திய அரசும் இந்த வேலையை முடிக்க வேண்டும். மாநிலங்களின் நலன்கள் கவனிக்கப்படும் என்று” உறுதி அளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கடும் வாக்குவாதம்:
வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆரம்பத்தில் முரண்பாட்டை கடைபிடித்த பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் திருத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆனால் கர்நாடகாவும் கேரளாவும் கடைசி நேரம் வரை பிடிவாதமாக இருந்துள்ளன. வருவாய் இழப்புக்கான இழப்பீடு குறித்து மாநிலங்களுக்கு உறுதியான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும், விவாதத்தை அடுத்த நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் மற்ற மாநிலங்கள் இந்த நடவடிக்கையை விரும்பவில்லையாம். அப்போது குறுக்கிட்ட சத்தீஸ்கர் நிதியமைச்சர் ஓ.பி. சவுத்ரி, கர்நாடகாவும் கேரளாவும் ஒப்புதலுக்கு தயாராக இல்லை என்றால், பொது வாக்கெடுப்பு மூலம் இந்த விஷயத்திற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவுகள் எப்போதும் ஒருமித்த கருத்துடனேயே எடுக்கப்படும். லாட்டரி டிக்கெட் மீது 28 சதவிகித வரி விதிக்கப்படுவது மட்டுமே, இதுநாள் வரை வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒகே சொன்ன எதிர்க்கட்சிகள்:
சத்தீஸ்கர் நிதியமைச்சர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதால், நிர்மலா சீதாராமனும் தயக்கத்துடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அப்போது மேற்குவங்கம் தலையிட்டு, கர்நாடகா மற்றும் கேரளாவை சமாதானப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி திருத்தம் தொடர்பான முடிவுகள் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, புதிய வரி விகிதங்கள் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
ஜிஎஸ்டி திருத்தத்தின் தாக்கம் என்ன?
திருத்தத்தின்படி, இதுநாள் வரை நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இனி 5 மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு அடுக்குகளாக மட்டுமே இருக்கும். உயர் ரக கார்கள், ஆடம்பரமான பொருட்கள் மற்றும் சிகரெட், புகையிலை போன்ற ஆபத்தான பொருட்கள் மீது மட்டும் 40 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது எப்படி தடுமாற்றம் இருந்ததோ, அதே மாதிரி ஜிஎஸ்டி மறுசீரமைப்பும் முதல் ஆறு மாதங்களுக்கு வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதியாண்டின் மீதமுள்ள காலத்திற்கு சரிவு ஏற்படலாம், ஆனால் அதன் நேர்மறையான விளைவுகள் 6 மாதங்களுக்குப் பிறகு தெரியத் தொடங்கும். மக்கள் கைகளில் அதிக பணம் இருக்கும், நுகர்வு அதிகரிப்பதால், வருவாய் படிப்படியாக அதிகரிக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.





















