Delhi Flood: அபாய கட்டத்தை தாண்டிய யமுனை நதி! அலர்டில் தலைநகர்... வடமாநிலங்களை கதிகலங்க வைக்கும் வெள்ளம்..
டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், யமுனைக்கு அருகிலுள்ள லோஹா புல் இரும்பு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலமானது மூடப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், டெல்லியில் உள்ள யமுனை நதியின் நீர்மட்டம், 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆபாய அளவை தாண்டி செல்வதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இரும்புப் பாலம் மூடல்:
டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், யமுனைக்கு அருகிலுள்ள லோஹா புல் இரும்பு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலமானது மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நேற்று இரவு முதல் லோஹா புல் பொது மக்களுக்கு மூடப்பட்டுள்ளது. யமுனை நதியின் நீர்மட்டம் தற்போது 206.65 மீட்டராக உள்ளது.
இன்றைய எச்சரிக்கை:
செப்டம்பர் 3 ஆம் தேதி டெல்லியில் மேகமூட்டமான வானிலை மற்றும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை துறை கணித்துள்ளது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, டெல்லியில் 963.4 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி 37.8 மிமீ மழையும், செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணி வரை 16 மிமீ மழையும் பதிவாகியுள்ளது, இதன் காரணமாக மொத்த மழைப்பொழிவு எண்ணிக்கை ஆயிரம் மில்லிமீட்டரைத் தாண்டியது.
1,337 சாலைகள் மூடல்:
இதே போல்இமாச்சலப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 1,337 சாலைகள்மூடப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா, மண்டி, சிர்மௌர் மற்றும் கின்னௌர் மாவட்டங்களின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது, அதே நேரத்தில் உனா மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் கனமழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பிலும் வெள்ளம்:
பஞ்சாபில் பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா மற்றும் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பல அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரையிலான நிலைமை குறித்து மாநில அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, ஆரம்பத்தில் 23 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
68 ரயில்கள் ரத்து:
கனமழை காரணமாக செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஜம்மு மற்றும் கத்ரா நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் 68 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழைக்குப் பிறகு சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் நிரம்பி வழிவதால் பஞ்சாபின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழை காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான ஹரியானாவிலும் கனமழை பெய்து வருகிறது.






















