காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! 60 கோடியில் செவிலிமேடு பாலாற்றில் புதிய மேம்பாலம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
Kanchipuram Palar Bridge: "காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பகுதியில், 900 மீட்டர் நீளத்திற்கு 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது"

"காஞ்சிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், செவிலிமேடு பகுதியில் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது"
கோயிலுக்கும் பட்டுக்கும் புகழ்பற்ற காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கோயில் நகரமாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று காஞ்சிபுரம் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கும் புகழ் பெற்றதாக விளங்கி வருகிறது. காஞ்சிபுரத்திற்கு ஆன்மீக சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை வாங்குவதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பட்டுப் புடவை எடுப்பதற்காக காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுக்கின்றனர். இதனால் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலம் - Kanchipuram Palar Bridge
காஞ்சிபுரத்திற்கு வருவதற்கு மிக முக்கிய சாலையாக, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை இருந்து வருகிறது. குறிப்பாக இந்த சாலையை பயன்படுத்தி ஆன்மீக சுற்றுலா வரும் நபர்கள் மற்றும் வேலைக்காக காஞ்சிபுரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்பவர்கள், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் வந்து செய்கின்றனர்.
குறிப்பாக இந்த சாலை வழியாக தான் காஞ்சிபுரத்திலிருந்து திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேத்பட், திருவண்ணாமலை, சேலம், போளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த சாலையில் பாலாற்றின் குறுக்கே, செவிலிமேடு என்ற பகுதியில் பாலம் அமைந்துள்ளது. இந்த ஒரு பாலம் வழியாகத்தான் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், தினமும் வந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றன.
பழுதடைந்த செவிலிமேடு பாலாறு பாலம்
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட செவிலிமேடு பாலாறு பாலம் தற்போது, சேதம் அடைந்து காணப்படுகிறது. பாலம் சேதமடைந்து இருப்பதால், பாலத்தை வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால், வாகன ஓட்டுகள் அவதி அடைந்து வருகின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து செல்வதற்கும், காஞ்சிபுரத்திற்கு வருவதற்கும் ஒரே பாலம் இருப்பதால் முகூர்த்த நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியுள்ளது.
புதிய செவிலிமேடு பாலம் - Kanchipuram New Palar Bridge
செவிலிமேடு பாலாறு குறுக்கே புஞ்சைஅரசன்தாங்கல் பகுதியிலிருந்து, செவிலிமேடு வரை, சுமார் 900 மீட்டர் நீளத்திற்கு 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செவிலிமேடு, உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. பாலத்தின் அகலம் 7.5 மீட்டராக என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த பாலம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக காஞ்சிபுரம் மக்கள், செவிலிமேடு பாலாறு பகுதியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவது, காஞ்சிபுரம் மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















