Trump: ஒரு தலைபட்சம்.. முட்டாள்.. இந்தியா மீதான வரி பற்றி ட்ரம்ப் பரபரப்பு பேட்டி
இந்தியாதான் அதிக வரி வசூல் செய்கிறது என்றும், நாங்கள் முட்டாள் போல வரியை வசூலிக்கவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

உலக நாடுகள் மத்தியில் பெரும் வேதனையை உண்டாக்கியிருப்பது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள ஏற்றுமதி வரியே ஆகும். இந்தியாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த அமெரிக்கா திடீரென 50 சதவீதம் ஏற்றுமதி வரியை விதித்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் இந்தியா மீதான வரி குறித்து பேசினார். அவர் கூறியதாவது,
முட்டாள்:
இந்தியாவுடன் நாங்கள் நன்றாக பழகுகிறோம். ஆனால், இந்தியாவுடனான உறவு ஒரு தலைபட்சமாக இருந்தது. இந்தியா வரிகளில் எங்களிடம் இருந்து மிகப்பெரிய கட்டணங்களை வசூலித்து வருகின்றனர். அதுதான் உலகிலேயே உயர்ந்தது. இதனால், நாங்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் எங்களுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அதற்கு காரணம் நாங்கள் அவர்களிடம் முட்டாள்கள் போல வரியை வசூலிக்கவில்லை.
VIDEO | US President Donald Trump, in reply to a question on tariff on India, says, "We get along with India very well, but India has, you have to understand, for many years, it was a one-sided relationship only now, since I came along, and because of the power that we have with… pic.twitter.com/YdfwUbvaz0
— Press Trust of India (@PTI_News) September 2, 2025
அவர்கள் தயாரிக்கும் அனைத்தையும் இங்கே பெருமளவு அனுப்புவார்கள். நம் நாட்டிற்கு அனுப்புவார்கள். ஆனால், அது இங்கே தயாரிக்கப்படாது. ஆனால், அவர்கள் எங்களிடம் 100 சதவீத வரியை வசூலிப்பதால் நாங்கள் எதையும் அனுப்பமாட்டோம்.
200 சதவீத வரி:
ஹார்லி டேவிட்சனை இந்தியாவிற்குள் விற்க முடியாது. அந்த மோட்டார் சைக்கிளுக்கு 200 சதவீத வரி இருந்தது. ஹார்லி டேவிட்சன் இந்தியாவிற்குச் சென்று ஒரு தொழிற்சாலையை கட்டியது. இப்போது, அவர்களும் வரி செலுத்த வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வருகின்றனர். கார், ஏஐ நிறுவனங்கள்.
நம்மிடம் ஏராளமான கார் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவர்கள் சீனாவில் இருந்து வந்தவர்கள். மெக்சிகோவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் கனடாவில் இருந்து வந்தவர்கள். இங்கு உருவாக்க வேண்டும் என்று அவர்கள் நாட்டில் இருந்து வந்தவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்றுமதி வரி:
ட்ரம்பின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மீதான 50 சதவீத வரியை குறைப்பதற்கு இந்தியா தொடர் பேச்சுவார்த்தையை அமெரிக்காவுடன் நடத்தியது. ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் 7.6 லட்சம் கோடி வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், ஏற்கனவே ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் இந்தியா தற்போது சீனாவுடனும் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின் - மோடி - ஜின்பிங் ஒன்றாக சிரித்துப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியது.
இந்தியா - சீனா - ரஷ்யா:
உலகின் மிகப்பெரிய மனித சக்தி, தொழில் சக்தி, தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட 3 நாடுகள் ஒன்றாக தொழில்துறையில் இணைந்தால் அமெரிக்காவிற்கு சறுக்கலாவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு என்பதே அமெரிக்காவின் இந்த அச்சத்திற்கு காரணம் ஆகும். இந்த சூழலில், நாங்கள் முட்டாளைப் போல வரி வசூலிக்கவில்லை என்று ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.





















