DMDK Meeting: 14ம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு எப்போதுகூட்டம் - பிரேமலதா, விஜய பிரபாகரனுக்கு புதிய பதவியா?
தேமுதிக செயற்குழு, பொதுக்குழு எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேமுதிக செயற்குழு, பொதுக்குழு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வீடு திரும்பிய விஜயகாந்த்:
தேமுதிக நிறுவனத் தலைவரும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு திடீரென சளி, காய்ச்சல், இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கடந்த மாதம் இறுதியில் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஒரு விளக்கத்தை பிரேமலதா வெளியிட்டிருந்தார். அதில், விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தெரிவித்ததுடன் அவருக்கு தீவிர சிகிச்சை எல்லாம் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் முடிந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று தேமுதிக சார்பில் அறிக்கை வெளியானது.
தேமுதிகவின் செயற்குழு,பொதுக்குழு:
இச்சூழலில், தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், தற்போது தேமுதிகவில் பொருளாளராக இருக்கும் விஜகாந்தின் மனைவி பிரேமலதா கட்சியின் எதிர்கால திட்டங்கள் வகுப்பது, மாவட்டச் செயலாளர் கூட்டங்கள் நடத்துவது, மாநாடு நடத்துவது குறித்து திட்டங்கள் தீட்டுவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை செய்வது, குறித்து உரையாற்றுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
கூடுதல் பொறுப்பு:
அதேபோல், தேமுதிக பொருளாளராக உள்ள பிரேமலதாவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே கட்சியின் நலன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளை பெற்று தேர்தலில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிப்பதற்கு இந்த கூட்டம் முக்கிய பங்காற்றும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: O Panneerselvam: அதிமுக அடையாளங்களை பயன்படுத்தமாட்டோம் - நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு உத்தரவாதம்; ஏன் தெரியுமா?
மேலும் படிக்க: AIADMK: வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு; அதிமுக அடையாளங்களை பயன்படுத்தவில்லை- ஓபிஎஸ் விளக்கம்