CM Stalin: "என் வழி.. தனி வழி.." ஆக்கப்பூர்வ அரசியல்தான் எங்கள் பாணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் வரி விதிப்பதன் மூலம், ஆன்லைன் விளையாட்டுகளை அங்கீகரிப்பதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்லார்.
உங்களில் ஒருவன் பதில்கள் எனும் தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின், ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அரசின் நலத்திட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்துள்ளார். அதில், ”ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான அரசியல் என் பாணி. அவதூறு அரசியல் அவர்கள் பாணி.
அதானி விவகாரம்:
மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கு கூட நிதி ஒதுக்கப்படவில்லை. அதானி விவகாரத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகள் ஆணித்தரமானவை. அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும், மக்களின் மனதில் இருந்து நீக்கமுடியாது. அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்.
ஆளுநர் ரவி மீது குற்றச்சாட்டு:
இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.விற்கு சாதகமா என கேட்கப்பட்டதற்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட சின்னம் தான் இரட்டை இலை என்றார். தொடர்ந்து “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் சட்டமன்றத்தை அவமதிக்கிறார். 3 மாதமாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தான் மர்மமாக உள்ளது. ஆன்லைன் ரம்மியில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்பவர்கள் பற்றிய செய்தி தினந்தோறும் நாளிதழ்களில் வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆன்லைன் ரம்மி தடைச் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், இதுவரை ஒப்புதல் கொடுக்காமல் சட்டமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆன்லைன் விளையாட்டுகளில் வெல்லக்கூடிய தொகைக்கு ஒன்றிய அரசு வரி விதிப்பது கொடுமை. இது ஆன்லைன் விளையாட்டுகளை ஒன்றிய அரசு அங்கீகரிக்கும் விதமாக உள்ளது.
ஈபிஎஸ்-க்கு பதில்:
திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள 85% வாக்குறுதிகளில் நிறைவேற்றியிருக்கிறோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பத்தை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டதாக சொன்ன எடப்பாடி பழனிசாமி இதிலும் பொய்தான் பேசுவார். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன ஓரிரு திட்டங்கள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. அவை அனைத்தையும் இன்னும் ஒரே ஆண்டில் நிறைவேற்றிக் காட்டுவேன்.
”என் பாணி, தனி பாணி” - ஸ்டாலின்
யார் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் மணிக் கணக்கில் எப்படி பேச வேண்டும் என்பதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியதை வைத்து தெரிந்துக்கொண்டேன். அவதூறு, பொய், விதாண்டவாதங்களுக்கு பதில் சொல்லி என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. ஆக்கப்பூர்வமான ஆலோசனையாக இருந்தால் எதையும் செயல்படுத்துவேன். ஆக்கப்பூர்வமான செயல்களை மட்டுமே சிந்திக்கிறேன். என்னுடைய இந்த பாணி எதிர்க்கட்சிகளை நிலைக்குழைய வைத்திருக்கிறது. ஆக்கப்பூர்வமான அரசியல் என் பாணி, அவதூறு அரசியல் அவர்கள் பாணி. நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்து தருவதே எனது இலக்கு” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.