Yogi Adityanath | ஆர்.எஸ்.எஸ்., மறுத்த பதவி.. மோடி வழங்கிய பொறுப்பு... அஜய் மோகன் பிஸ்ட் யோகியாக மாறிய கதை!
Yogi Adityanath : கோரக்பூரின் வலிமையான அரசியல் தலைவர்களாக திகழ்ந்த ஹரிஷங்கர் திவாரி மற்றும் வீரேந்திர பிரதாப் ஷாஹியின் பிடி தளர்ந்து வந்த நேரத்தில் யோகி ஆதித்யாநாத்தின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார் யோகி ஆதித்யநாத். உண்மையில் யோகி ஆதித்யநாத் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது மிகப்பெரிய சாதனைதான். ஏனெனில் இதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தை ஆண்ட பாஜக முதலமைச்சர்களான கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங் யாருமே 5 ஆண்டுகளை நிறைவு செய்ததில்லை. இதனால் தான் யோகி ஆதித்யநாத்தின் 5 ஆண்டு ஆட்சி முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆனந்த் பிஸ்ட் மற்றும் சாவித்ரி தேவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் யோகி ஆதித்யநாத். ஆனந்த் பிஸ்ட்டுக்குப் பிறந்த 4 ஆண் குழந்தைகள், 3 பெண்குழந்தைகள். அவரது இயற்பெயர் அஜய் மோகன் பிஸ்ட். பள்ளிப்படிப்புகளை படித்த அவர் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி கணிதம் படித்தார். ஆரம்பத்தில் இருந்தே அஜய் மோகன் பிஸ்ட்க்கு இந்து மத நம்பிக்கைகளில் அதி தீவிரமாக இருந்தார். கல்லூரி நாட்களில், மாணவ சங்கத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பினார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவ சங்கமான அகில இந்திய வித்யார்த்தி பரிஷ்த்தில், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த சமயத்தில் தான் மஹ்ந்த் அவைத்யநாத்தை முதல்முறையாக சந்தித்தார். சந்தித்ததோடு மட்டுமல்லாமல் அவரை தனது குருவாகவும் ஏற்றுக்கொண்டார். மகந்த் திக்விஜயசிங்கின் காலத்தில், கோரக்நாத் ஆலயம், அரசியலின் முக்கிய மையமாக மாறியது, அவருக்கு பிறகு மஹந்த் அவைத்யநாத் அதை முன்னெடுத்துச் சென்றார். 1994ல் தீட்சை பெற்ற அஜய் மோகன் பிஸ்ட் தனது பெயரை யோகி ஆதித்யநாத் என்று மாற்றிக்கொண்டார். அதன் பின்பு தான் தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
கோரக்பூரின் வலிமையான அரசியல் தலைவர்களாக திகழ்ந்த ஹரிஷங்கர் திவாரி மற்றும் வீரேந்திர பிரதாப் ஷாஹியின் பிடி தளர்ந்து வந்த நேரத்தில் யோகி ஆதித்யாநாத்தின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியின் எம்பியாக 4 முறை இருந்த யோகி அதித்யநாத்தின் குரு மகந்த் அவைத்யநாத்தின் தொகுதியில் 1998ல் பாஜக சார்பாக களமிறங்கினார். பாஜகவின் கோட்டையான அந்த தொகுதியில் வெற்றிபெற்றபோது யோகி ஆதித்யநாத்துக்கு வயது 26 தான். நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இளம் உறுப்பினர் யோகி ஆதித்யநாத் தான். எம்பி ஆன பிறகு இந்து யுவ வாகினி என்ற அமைப்பைத் தொடங்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களை அதில் சேர்த்து தனக்கு பலத்தை சேர்த்துக்கொண்டார். உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக ஆகும் வரை அதே தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். தற்போது வரவிருக்கும் தேர்தலில் கூட கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒருதொகுதியில் தான் போட்டியிடுகிறார் யோகி ஆதித்யநாத்.
கோரக்பூரில் இருந்து எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், ஐந்து மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அதில், பொது உரிமையியல் சட்டம், 'இந்தியா' என்ற பெயரை 'பாரத்' என்று அதிகாரபூர்வமாக மாற்றுவது, பசு வதைத் தடை, மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கோரக்பூர் அமர்வை உருவாக்குதல் போன்றவை அடங்கும்.
வலதுசாரிகளின் கனவான ராமர்கோவிலை கட்டுவது என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. அகிலேஷ் யாதவை தோற்கடித்து பாஜக அரியணை ஏற வேண்டுமென்றால் அதற்கு வீரியம் மிக்க ஒரு தலைவர் தேவை என்ற குரல் வலதுசாரியினரிடையே எழுந்தது. இதற்கிடைப்பட்டகாலத்தில் தனது இந்து யுவ வாஹினி அமைப்பின் செயல்பாடுகளால் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமாகியிருந்தார் யோகி ஆதித்யநாத். அவரது குருவின் மறைவுக்குப் பின்னர் 2014ம் ஆண்டில் கோரக்நாத் கோயிலின் தலைமை பூசாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதோடு கோவில் மரபுப்படி, காதணி ஒன்றும் அணிவிக்கப்பட்டது.
கோரக்நாத் கோயிலின் மடாதிபதி பொறுப்பு அதிகாரமிக்க பொறுப்பு என்பதால், ராமர் கோவிலை கட்டி முடிக்க சரியான ஆள் யோகி ஆதித்யநாத் தான் என்று பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் வலியுறுத்த உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் முன்னிருத்தப்பட்டார். 2017ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்கள் பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.
2014ல் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தபோதே சர்ச்சைப்பேச்சுக்களால் பிரபலமாகியிருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். இந்துக்களின் நலன் என்ற பெயரில் தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செயல்படுத்தத்தொடங்கினார். குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை தனது அதிகாரத்தின் மூலம் தீர்த்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது. லவ் ஜிகாத், கர்வாப்சி போன்ற பெயர்கள் யோகியின் ஆட்சிக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் பிரபலமான வார்த்தைகள். தான் ஆட்சிக்கு வந்த பிறகு இவற்றையெல்லாம் கடுமையாக்கினார். லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவந்தார். பசு வதை தடைச் சட்டம், மதமாற்ற தடுப்புச் சட்டம், சிஏஏவை அமல்படுத்தியது உள்பட பல்வேறு சட்டங்களை கொண்டுவந்திருக்கிறார்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் உதவியோடு நிதியைப் பெற்று உத்தரப்பிரதேசத்தை கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் என்று விமர்சிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால், அந்த மாநிலத்தில் இருந்து எந்த வித முன்னேற்றமும் இல்லை. எல்லாவிதமான குறியீட்டிலும் கடைசி இடத்தில் இருக்கிறது உத்தரப்பிரதேசம் என்கிறது புள்ளிவிவரங்கள். வேலைவாய்ப்பின்மை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிப்பது, குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிப்பது, வறுமை, பட்டினி, கல்வியில் பின்தங்கியது என்று எல்லா விதத்திலும் சறுக்குகிறது உத்தரபிரதேசம். தன் மாநில மக்களுக்கான நலத்திட்டங்களைக் காட்டிலும் இந்துக்களின் புனித விலங்கு என்று கூறப்படும் பசுவின் பாதுகாப்பிற்காக நிறைய விஷயங்களை செய்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.
கொரோனா பெருந்தொற்றை மிக மோசமாக கையாண்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் தான் டாப். இரண்டாம் அலை இந்தியாவை புரட்டியெடுத்துக்கொண்டிருந்தபோது இந்தியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் இறப்புகளும், நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவாக காட்டப்பட்டன என்று குற்றச்சாட்டு எழுந்தது. யோகி ஆதித்ய நாத்தின் ஆளுமை குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்றன. அவரது நிர்வாகத்திறன் குறித்து பெருமளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. ஆனால், யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகத்திறனை கங்கை நதி வெளிச்சம்போட்டு காட்டியது என்றே தான் சொல்லலாம். கங்கை நதிக்கரையில் மிதந்த பிணங்களும், தொடர்ந்து எரிந்துக்கொண்டிருந்த பிணங்களும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2020ல் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த பிஷ்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தந்தையின் இறுதிச்சடங்குகளுக்குச் செல்லாமல் ஓரு அறிக்கையை வெளியிட்டார் யோகி ஆதித்யநாத். அதில், "கொரோனாவை எதிர்கொள்ளும் அரசு பணிகள், ஊரடங்கு வெற்றிகரமாக செயல்படுத்த நினைக்கும் காரணத்தால், அவரது இறுதி சடங்கிற்கு என்னால் கலந்து கொள்ள முடியாது. எனக்கு 23 கோடி மக்களின் நலன் தான் முக்கியம்", என்று கூறி இறுதிச்சடங்குக்குச் செல்லாமல் தவிர்த்துவிட்டார். ஆனால், தனது குருவை மரபுப் படி தன் தந்தையாக ஏற்றுக்கொண்டுவிட்ட காரணத்தினாலேயே அவர் அங்கு செல்லவில்லை என்று மற்றொரு காரணமும் கூறப்பட்டது. பதற்றம் நிறைந்த மாநிலமாகவே தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாக முதலீட்டாளர்கள் உத்தரபிரதேசத்தை பார்க்காததால் புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகவில்லை.
யோகி ஆதித்யநாத்தின் முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுவது அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கியது தான். எதற்காக யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக முன்னிருத்தப்பட்டாரோ அந்த வேலைகளைத் தொடங்கிவிட்டார். அவர் மீண்டும் முதலமைச்சரானால் தான் ராமர் கோயில் பணிகளை முடிக்க முடியும், இந்து தர்மத்தை காக்க முடியும் என்று பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மதத்தை மட்டுமே முன்னிருத்தி பாஜக பிரச்சாரம் செய்யும் நிலையில் இந்த வகை பிரச்சாரங்கள் எடுபடவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
உத்தரப்பிரதேசத்தின் அடுத்த 5 ஆண்டுகால தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போவது மதமா, மதச்சார்பின்மையா? மக்கள் எதன் பக்கம் என்பது மார்ச் 10ம் தேதி தெரிந்துவிடும்.