Supreme Court : 4 ஆண்டுகளுக்கு பிறகு முழு பலம்..34 நீதிபதிகளுடன் இயங்கப்போகும் உச்சநீதிமன்றம்..!
மேலும் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரையில், அதன் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை அளவு 34ஆகும். இதுதான் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை.
சமீபத்தில், ஐந்து பேர் நீதிபதிகளாக பதவியேற்றதன் மூலம் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32ஆக உள்ளது.
இந்நிலையில், மேலும் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், உச்ச நீதிமன்றம் முழு நீதிபதிகள் பலத்துடன் இயக்க உள்ளது. அடுத்த சில நாள்களில் மத்திய அரசு, இதற்கான உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடைசியாக, ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில், உச்ச நீதிமன்றம் முழு நீதிபதிகள் பலத்துடன் இயங்கியது. கடந்த டிசம்பர் மாதம், மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இரண்டு நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.
ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சமீபத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், மேலும் இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையை பொறுத்தவரையில், அதன் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், இந்திய நீதித்துறை வரலாற்றில் வரும் 2027ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு பெண், இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். பி.வி. நாகர்தனா, உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெற உள்ளார்.