Organ donation: நெகிழ்ச்சி..தந்தைக்கு கல்லீரலின் ஒரு பாகத்தை தானம் செய்த 17 வயது மகள்..தடைக்கற்களை மீறி சரித்திரம் படைத்த சிறுமி..!
தனது தந்தைக்கு உடல் உறுப்பு தானம் செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு 17 வயது சிறுமி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
உடல் தானம் செய்வது மகத்தான ஒரு செயல் ஆகும். நாம் இறந்த பிறகும் மற்றவர்களை வாழ வைப்பது உன்னதமான செயல். இந்தியாவை பொறுத்தவரையில், குறிப்பிட்ட வயதுக்கு பிறகே தானம் செய்ய வேண்டும். சட்டத்தின்படி, 18 வயதுக்கு கீழானவர்கள் தானம் செய்யக் கூடாது.
நெகிழ்ச்சி சம்பவம்:
ஆனால், தனது தந்தைக்கு உடல் உறுப்பு தானம் செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு 17 வயது சிறுமி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கல்லீரலின் ஒரு பாகத்தை தனது தந்தைக்கு தானமாக வழங்கியுள்ளார் கேரளாவை சேர்ந்த 17 வயது சிறுமி.
இதன் மூலம், இளம் வயதில் தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 12ஆம் வகுப்பு மாணவி தேவானந்தா. தனது தந்தைக்கு உடல் உறுப்பு தானம் செய்ய சட்டப்போராட்டத்தில் இறங்கியுள்ளார் இந்த மாணவி.
சட்டப்போராட்டம்:
சிறார் உடல் உறுப்பு தானம் செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை என்பதால் விதிவிலக்கு கோரி கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு, பிப்ரவரி 9 ஆம் தேதி, நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தை பிரதீஷைக் காப்பாற்றுவதற்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கினார் தேவானந்தா. 48 வயதான பிரதீஷ் திருச்சூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
தானம் செய்யும்போது கல்லீரலை நல்ல நிலையில் வைத்திருப்பதற்காக தேவானந்தா தனது உணவில் கடுமையான மாற்றங்களைச் செய்து, உள்ளூர் ஜிம்மில் சேர்ந்துள்ளார். உடற்பயிற்சிகளை செய்துள்ளார்.
ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. தேவானந்தாவின் செயலை பாராட்டி, மருத்துவமனை அறுவைச் சிகிச்சைச் செலவைத் தள்ளுபடி செய்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்த பிறகு, தேவானந்தா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, "பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக" மகிழ்ச்சியாக கூறுகிறார் தேவானந்தா. பிரதீஷின் வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறியது. முன்னதாக, அவருக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. குடும்பத்திற்கு தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததால், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்ய தேவானந்தா முடிவு செய்தார்.
தடைக்கற்களை மீறி சரித்திரம் படைத்த சிறுமி:
மனித உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டத்தின்படி, உடல் உறுப்புகளை தானம் செய்ய சிறார்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்த அவர், இதேபோன்ற ஒரு வழக்கில், ஒரு மைனர் குழந்தை உடல் உறுப்பு தானம் செய்ய நீதிமன்றம் அனுமதித்ததைக் கண்டறிந்த பிறகு, கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அனைத்து தடைக்கற்களையும் தாண்டி தேவானந்தா மேற்கொண்ட முயற்சியை பாராட்ட கேரள உயர் நீதிமன்றம் உடல் உறுப்பு தானம் அனுமதி வழங்கியது.