IOB Recruitment for LBO: உங்களுக்கு தமிழ் தெரியுமா.? ஐஓபி வங்கியில் அருமையான வாய்ப்பு, தவற விடாதீங்க; முழு விவரம் இதோ
தமிழ் தெரிந்தவர்களுக்கு இந்தியன் ஓவர்வீஸ் வங்கியில் ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. உள்ளூர் வங்கி அதிகாரிக்கான 400 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான விவரங்களை பார்க்கலாம்.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், உள்ளூர் வங்கி அதிகாரி( Local Bank Officer) பணியிடங்களை நிரப்ப, அவ்வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, கல்வித் தகுதி என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மொத்த பணியிடங்கள் எத்தனை.?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அறிவிப்பின்படி, மொத்தம் 400 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
அதில், தமிழ்நாட்டில் மட்டும் 260 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மகாராஷ்டிராவில் 45, மேற்கு வங்கத்தில் 34, குஜராத்தில் 30, பஞ்சாப்-ல் 21, ஒடிசாவில் 10 காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன.?
உள்ளூர் வங்கி அதிகாரி பணிக்கான கல்வித்தகுதி - டிகிரி மற்றும் உள்ளூர் மொழித்திறன் அவசியம் என கூறப்பட்டுள்ளது. அதாவது, அந்தந்த மாநிலத்தில் விண்ணப்பிப்போருக்கு, அந்த மாநிலத்தில் பேசும் மொழி தெரிந்திருக்க வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டில் விண்ணப்பிப்போருக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
அதன்படி, ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு நடைபெறும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் உள்ளூர் மொழியில் படித்தவர்கள், அதற்கு ஆவணமாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவர்கள் உள்ளூர் மொழித்திறன் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் வங்கி அதிகாரி பணிக்கான வயது வரம்பு, 20 முதல் 30 வயது வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை மற்றும் சம்பளம்
உள்ளூர் வங்கி அதிகாரிக்கான தேர்வுமுறை, ஆன்லைன் மற்றும் நேர்முகத் தேர்வு என கூறப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான சம்பளம் 48,480 முதல் 85,920 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அறிவிப்பின்படி, உள்ளூர் வங்கி அதிகாரிக்கான தேர்வுகள், தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, திருச்சி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 31-ம் தேதி. அதாவது, 31.05.2025.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க http://iob.in > Careers > Recruitment 2025-26 > Recruitment of Local Bank Officer 2025-26 என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.





















