IPL 2025 GT Win Over DC: சதத்தை சதத்தால் அடித்த குஜராத்; டெல்லியை சிதறவிட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம்
IPL 2025 GT Tops Table: ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி மற்றும் குஜராத் இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில், டெல்லியை சிதறடித்து புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது குஜராத் டைட்டன்ஸ்.

டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் பேட்டியில், டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில், 200 ரன்கள் இலக்கை, விக்கெட் இழப்பின்றி 19 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்ற குஜராத், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ராகுல் சதத்துடன் 199 ரன்களை இலக்காக நிர்ணயித்த டெல்லி
இந்த போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ஃபாப் டு ப்ளசிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும், மறுமுனையில் கே.எல். ராகுல் அதிரடி காட்டினார். அவருடன் இணைந்த விக்கெட் கீப்பரான அபிஷேக் பொரேலும் அதிரடியாகவே ஆடினார். அவர் 19 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, அதிரடியாக ஆடிவந்த கே.எல். ராகுலுடன், அணித் தலைவர் அக்சர் படேல் இணைந்தார். அவரும் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனிடையே, அதிரடியாக ஆடிவந்த கே.எல். ராகுல் தனது சதத்தை பூர்த்தி செய்தார். முன்னதாக, இந்த போட்டியில், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 8,000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் கே.எல். ராகுல். இதன் மூலம், விராட் கோலியின் சாதனையையும் அவர் முறியடித்தார்.
தொடர்ந்து, அக்சர் படேலுக்குப்பின் கே.எல். ராகுலுடன் இணைந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், 10 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டி ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் 65 பந்துகளில், 4 சிக்சர்கள், 14 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் கே.எல். ராகுல்.
இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது.
சதத்தை சதத்தால் அடித்து அசத்திய குஜராத்
இதைத் தொடர்ந்து, 200 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெல்லியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ஒரு பக்கம் சாய் சுதர்சன், இன்னொரு பக்கம் கேப்டன் சுப்மன் கில் என இரு அதிரடி ஆட்டக்காரர்கள், நாலாபுரமும் பந்துகளை பறக்க விட்டனர். டெல்லியின் பந்துவீச்சு எந்த பலனும் அளிக்காத நிலையில், சாய் சுதர்சனின் சதத்துடன், 19 ஓவர்களிலேயே 205 ரன்களை அடித்து, வெற்றி வாகை சூடயது குஜராத் டைட்டன்ஸ்.
சாய் சுதர்சன் 61 பந்துகளில் 4 சிக்சர்கள் 12 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மறுபுறம், சுப்மன் கில் 53 பந்துகளில் 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 93 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த இமாலய வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில், 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது குஜராத் டைட்டன்ஸ். டெல்லி 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.




















