பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் 100 நாள்கள்.. சறுக்கல்களும் சாதனைகளும்!
சிவில் சர்வீஸில் நேரடி நியமன முறையை ரத்து செய்தது, ஒளிபரப்பு வரைவு மசோதாவை திரும்பபெற்றது, வக்ஃப் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பியது என 100 நாள்களில் பல சறுக்கல்களை சந்தித்தது மோடி அரசு.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மூன்றாவது முறையாக பதவியேற்று இன்றுடன் 100 நாள்கள் நிறைவு பெறும் நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்த அரசின் சாதனைகள் குறித்தும் சறுக்கல்கள் குறித்தும் விவரிக்கிறது இந்த தொகுப்பு.
மோடி அரசு சந்தித்த சறுக்கல்கள்:
கடந்த 2014ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் பெரும் வெற்றியை பதிவு செய்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக அரசுக்கு 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் பேரதிர்ச்சியாக அமைந்தது.
240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி அமைத்தன. 2014 முதல் 2024 வரையிலான ஆட்சி காலத்தில் இருந்தது போன்ற பாஜகவால், தான் நினைத்த அனைத்தையும் செய்ய முடியவில்லை.
இந்திய குடிமைப் பணியில் (சிவில் சர்வீஸ்) நேரடி நியமன முறையை ரத்து செய்தது, ஒளிபரப்பு வரைவு மசோதாவை திரும்ப பெற்றது, வக்ஃப் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பியது, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்தது என கடந்த 100 நாள்களில் பாஜக அரசு, பல விவகாரங்களில் யூ டர்ன் அடித்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, கூட்டணி கட்சிகளின் அழுத்தம் ஆகியவை காரணமாகவே மோடி தலைமையிலான அரசு, இந்த முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. பல விவகாரங்களில் பின்னடைவை சந்தித்த அதே நேரத்தில், பல விதமான திட்டங்களில் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.
வளர்ச்சி பணி திட்டங்கள்:
உள்கட்டமைப்பு, விவசாயிகள், நடுத்தர வர்க்கம், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்டோரை மையமாக வைத்து கடந்த 100 நாள்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சாலை, ரயில்வே, துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
900 கிலோமீட்டருக்கு மேல் உள்ள எட்டு தேசிய அதிவேக சாலை தாழ்வார திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 76,200 கோடி செலவில் மகாராஷ்டிராவில் வாதவன் மெகா துறைமுகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
லடாக்கை இமாச்சலப் பிரதேசத்துடன் இணைக்கும் ஷிங்குன்-லா சுரங்கப்பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 17வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது. தவணையின் ஒரு பகுதியாக, 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 12 கோடியே 33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:
2024-25 ஆம் ஆண்டிற்கான காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் சுமார் ரூ.2 லட்சம் கோடி பயனடைந்துள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நகர்ப்புற திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுவரை, இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளன. 11 லட்சம் புதிய 'லக்பதி சகோதரிகளுக்கு' அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 1 கோடிக்கும் அதிகமான 'லக்பதி திதிகள்' இப்போது ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.
பிரதமரின் பழங்குடியினர் திட்டத்தின் கீழ், 5 கோடி பழங்குடியினரின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும் வகையில், 63,000 பழங்குடியின கிராமங்கள் மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இளைஞர்களிடையே அதிகாரம் மற்றும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக ரூ.2 லட்சம் கோடி-தொகுப்பை மோடி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 41 மில்லியன் இளைஞர்கள் பயன்பெறுவதை இலக்காக நிர்ணயித்துள்ளது.