IPL 2025 CSK: சிஎஸ்கே மேட்ச்சை பாக்க பஸ்ல ஃப்ரீயா போகனுமா? இது மட்டும் இருந்தாலே போதும்!
IPL 2025 CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடும் போட்டிகளின்போது ரசிகர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 22ம் தேதி தொடங்குகிறது. 18வது சீசனாக நடக்கும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கியமான அணியாக திகழும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.
இலவச பயணம்:
5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளில் ஒன்றாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சென்னை போக்குவரத்து கழகத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடும் போட்டிகளின்போது சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் போட்டியை காணச் செல்லும் ரசிகர்கள் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம்.
அதற்கு ரசிகர்கள் தங்களிடம் உள்ள போட்டிகளின் டிக்கெட்டுகளை நடத்துனர்களிடம் காண்பிக்க வேண்டும். போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பிருந்து இந்த இலவச பயணத்தை ரசிகர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இலவச பேருந்து சேவையானது ஏசி பேருந்துகளுக்கு பொருந்தாது.
பொதுப்போக்குவரத்து:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரசிகர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்தாண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இதை செயல்படுத்தி வருகிறது. கடந்தாண்டு சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகள் மூலமாக 8 ஆயிரம் ரசிகர்கள் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு கடைசி சீசனா?
சென்னை அணி நடப்பாண்டில் சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை அணியின் முன்னாள் கேப்டனுமாகிய தோனியின் கடைசி சீசனாக இந்த ஐபிஎல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவு இருப்பதால் சென்னை அணியின் போட்டியை காண நடப்பாண்டிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகளவு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் 6 போட்டிகள் நடப்பாண்டில் ஆடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, கான்வே, ராகுல் திரிபாதி, ஷைக் ரஷீத், வான்ஷ் பேடி, சித்தார்த், ரவீந்திரா, அஸ்வின், விஜய் சங்கர், சாம் கரண், கம்போஜ், தீபக் ஹுடா, ஜேமி ஓவர்டன், கம்லேஷ் நாகர்கோட்டி, கோஷ், ஜடேஜா, ஷிவம் துபே, கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் செளத்ரி, குர்ஜப்நித் சிங், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் பதிரானா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

