RRB: தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் ரயில்வே தேர்வு மையம்; வலுக்கும் கண்டனங்கள்- மாற்றப்படுமா?
இத்தேர்வை எழுத பல நூறு கி.மீ. பயணித்து, அங்கேயே தங்கி தேர்வு எழுதுவது பொருளாதார ரீதியாகவும் நேர மேலாண்மையிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

ரயில்வே தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்த தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு, சுமார் 1500 கி.மீ. தூரத்துக்கு அப்பால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதற்கு, கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தேர்வு மையங்களை தமிழ்நாட்டுக்கே மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
நடந்தது என்ன?
இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் மூலம் ரயில்வே பணிகளுக்கான காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் உதவி ஓட்டுனர் பணிக்கான (Assistant Loco Pilot) முதற்கட்டத் தேர்வு கணினி மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட கணினித் தேர்வுகள் (CBT 2) மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. இந்தத் தேர்வை எழுத தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள்
இந்தத் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 6,315 தேர்வர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்காமல் பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே உதவி ஓட்டுநர் பணி என்பது ஆரம்பநிலைப் பணிகளில் ஒன்றாகும். இத்தேர்வை எழுத பல நூறு கி.மீ. பயணித்து, அங்கேயே தங்கி தேர்வு எழுதுவது பொருளாதார ரீதியாகவும் நேர மேலாண்மையிலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, சொந்த ஊருக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான CBT 2 தேர்வுக்கு 6000-க்கும் மேலானவர்கள் CBT 1 தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் இருந்து தகுதி பெற்றுள்ளார்கள். இந்தத் தேர்வு எதிர்வரும் மார்ச் 19, 2025 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்குள் மாற்றித் தர வேண்டும்
இதற்கான தேர்வு மையங்கள் நிறைய தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து தெலுங்கானா வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்வர்கள் நிதிச் சுமைக்கும், கடுமையான அலைச்சலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. மதுரை நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் என்னை அணுகி தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்குள் மாற்றித் தருவதற்கு தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
ஆகவே தேர்வு மையங்களை மாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு கேட்டு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு கடிதம் எழுதி உள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். அதேபோல பாமக தலைவர் அன்புமணியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

