கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது வண்புருஷோத்தமன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ திருவிழா... பரவசத்தில் பக்தர்கள்...!
திருநாங்கூர் வண்புருஷோத்தமன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் பெருமாள் கோயில் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
வண்புருஷோத்தமன் பெருமாள் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களும் ஒன்றான வண்புருஷோத்தமன் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் வைணவ சமயத்தின் முக்கிய 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். புராணக் கதையின் படி, ஒரு முறை மஹா பிரளயம் (பெரிய வெள்ளப்பெருக்கு) ஏற்பட்டது. உலகம் முழுவதும் நீரால் மூழ்கிக்கொண்டிருந்தது. அப்போது பூமிதேவி பெருமாளை தொழுதுப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென வேண்டியுள்ளார். அதற்கு வண்புருஷோத்தமன் பெருமாள் அவதரித்து, பூமிதேவியை தனது திருக்கரங்களால் காப்பாற்றி, நிலையான அமைதியை வழங்கினார். இதன் அடிப்படையில் இத்தலத்திற்கு "பூமி நிலை பெற்ற ஸ்தலம்" என்ற சிறப்புப் பெயர் உள்ளது.
நாரத முனிவரின் தவம்
நாரத முனிவர் ஒருமுறை சிவன் அருளைப் பெறுவதற்காக தவம் இருந்தார். ஆனால் சிவபெருமான், "நீ முதலில் வண்புருஷோத்தமன் பெருமாளை தரிசிக்க வேண்டும்" என்று கூறினார். நாரதர் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு, பின்னர் சிவனைப் போற்றினார்.
திருநாங்கூர் 11 திவ்யதேசங்களில் ஒன்றாகும்
திருநாங்கூர் பகுதியில் 11 திவ்யதேசங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று வண்புருஷோத்தமன் கோயில் ஆகும். திருமங்கை ஆழ்வாரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும்.
கோயில் கட்டிடக்கலை & சிறப்புகள்
கோயில் அழகான திராவிடக் கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவராக உள்ள வண்புருஷோத்தமன் பெருமாள் கிழக்கு நோக்கி காட்சியளிப்பார். மகாலட்சுமி (திருமாமகள் நாச்சியார்) தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.கோயிலில் உள்ள தேர்த்திருவிழா, கருட சேவை, மற்றும் பங்குனி உத்சவம் மிகவும் பிரசித்தி பெற்றவை.
வழிபாட்டு பலன்கள்
இந்தத் திருத்தலத்திற்கு வருபவர்கள், தங்களின் வாழ்வில் உயர்வைப் பெறுவர் என்று நம்பப்படுகிறது. திருமணத் தடைகள் நீங்க வேண்டுமெனக் கேட்டு வழிபட்டால் விரைவில் திருமண யோகமுண்டாகும். தாயாரை வழிபட்டால் குடும்பத்தில் செழிப்பு ஏற்படும். திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த ஸ்தலத்தில், வியாக்ரபாதர் மகன் உபமணியும் தாய்ப்பால் நினைத்து அழ, பெருமாள் திருப்பாற்கடலை உண்டு பண்ணி பாலமுது ஊட்டியதாக ஐதீகம். ஆகையால் இங்கு வந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு பசிப்பிணி நீங்கும் என்று கூறப்படுகிறது.
Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...
ஆண்டு பிரமோற்சவ திருவிழா
இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க வண்புருஷோத்தமன் பெருமாள் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பெருமாள் கொடி மரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கருட கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பெருமாள் மற்றும் கொடி மரத்திற்கு மகா தீப ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 25-ம் தேதி காலை திருத்தேர் உற்சவமும், பெருமாள் திருப்பாற்கடலில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறயுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

