வந்தாங்க... முதல்முறையாக தஞ்சை பகுதிக்கு வந்தாங்க: யார் தெரியுங்களா?
இந்தியாவுக்கு வரும் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், மங்கோலியா வழியான மத்திய ஆசிய வான் வெளி வலசைப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றன.

தஞ்சாவூர்: வந்தாங்க... வந்தாங்க... முதல் முறையாக வந்தாங்க. யாரு? என்ன விஷயம் தெரியுங்களா? வட இந்தியாவிலிருந்து முதன்முறையாக தஞ்சாவூர் பகுதிக்கு புள்ளி மூக்கு வாத்துகள் வலசை வந்துள்ளது பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
வனத்துறை சார்பில் கணக்கெடுப்பு பணி
தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி தஞ்சாவூர் அருங்கானூயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை இணைந்து தஞ்சாவூர் வனக்கோட்டத்தின் சார்பாக நடைபெற்றது.
இதையடுத்து தஞ்சாவூர் வனத்துறையின் வனச்சரகர் ரஞ்சித், வனவர்கள் இளையராஜா, ரவி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் சதீஷ்குமார் ராஜேந்திரன் தலைமையில் 15 தன்னார்வலர்கள் பறவையில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
புள்ளி மூக்கு வாத்துக்கள் முதன்முறையாக வருகை
அதன்படி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாக காடுகளில் 70 வகை பறவை இனங்களைச் சேர்ந்த 1,113 பறவைகள் கணக்கிடப்பட்டன. மேலும், வளாகத்தில் உள்ள குளத்தில் வலசைப் பறவையான புள்ளி மூக்கு வாத்துகள் காணப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம். தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் இந்த புள்ளி மூக்கு வாத்துக்கள் காணப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த வாத்துகள் இப்பகுதியில் தென்பட்டது கிடையாது, இப்போதுதான் காணப்பட்டுள்ளது. அதே போல் செம்மார்பு குக்குருவான் குருவிகளும் அதிக அளவில் காணப்பட்டது.
தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திலும் கணக்கெடுப்பு
அதே போல், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காடுகளில் 58 பறவை இனங்களும், 667 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்னம்பட்டி, ஆச்சம்பட்டி காப்பு காடுகளிலும், கும்பகோணம் வனச்சரகத்தின் சார்பில் மகாராஜபுரம் அணைக்கரை பகுதிகளில் தன்னார்வலர்கள் மருத்துவர் ப்ரீத்தி, பெஞ்சமின் கொண்ட குழுவினரால் பறவை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
குளிர்காலம் தொடங்கியதும் வலசை வரும் பறவைகள்
பறவைகள் வலசை செல்வது குளிர்காலம் தொடங்கியதும் உலகெங்கும் நடக்கும் முக்கிய நிகழ்வு. அந்த வகையில், தற்போது பறவைகளின் வலசை தொடங்கியிருக்கிறது. பொதுவாக உலகின் வடபகுதிலிருந்து தென் பகுதிக்கு பறவைகள் வலசை வருகின்றன. குளிர்காலத்தில் வடபகுதியிலுள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்து விடும். இதனால், அங்கு மீன், பூச்சி, பழங்கள் உள்ளிட்ட உணவுகள் பறவைகளுக்குக் கிடைக்காது. இதனால், காடுகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளை சார்ந்து வாழும் பறவைகள் குளிர் காலத்தில் மிதவெப்பமண்டல நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன.
12க்கும் மேல் உள்ள வான்வழி வலசைப்பாதைகள்
உலகெங்கும் பறவைகளின் வான்வழி வலசைப் பாதைகள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. இந்தியாவுக்கு வரும் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், மங்கோலியா வழியான மத்திய ஆசிய வான் வெளி வலசைப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றன. 1980-லிருந்து இந்தியாவுக்கு வலசை வரும் வெளி நாட்டுப் பறவைகளின் வருகை வெகுவாக குறைந்து வருவதாக அச்சம் தெரிவிக்கும் பறவையியல் ஆர்வலர்கள், நமது சுற்றுச்சூழல் வேகமாக சீர்கெட்டு வருவதே இதற்கு காரணம் என்கிறார்கள்.
அக்டோபர் தொடங்கி மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்கி இருக்கும். அதன்படி, தற்போது வெளிநாட்டுப் பறவைகள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கிவிட்டன. இருப்பினும் வலசை வரும் பறவைகள் எண்ணிக்கை குறைந்துதான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

