Kerala Highcourt : அண்ணனால் கருவுற்ற சிறுமி.. கொதித்த கேரள உயர்நீதிமன்றம்.. அதிரடி தீர்ப்பும், அறிவுறுத்தலும்..
பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாலியல் கல்வியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாலியல் கல்வியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தனது சகோதரரால் கருவுற்ற 13 வயது சிறுமியின் 30 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிபதி வி.ஜி. அருண் இதனை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த மனுவில் இளம் வயதில் கர்ப்பத்தை சுமப்பதால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான உளைச்சல், உளவியல் ரீதியான தாக்கம் ஆகியவை காரணமாக கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆஜரான மனுதாரரின் வழக்கறிஞர், தொடர்ந்து வயிற்று வலி காரணமாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் வரை அச்சிறுமி கர்ப்பமானது தெரியாது என குறிப்பிட்டார். அதற்கு அரசு தரப்பில், 1971 ஆம் ஆண்டின் மருத்துவக் கருவுறுதல் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட கர்ப்ப காலம் 24 வாரங்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு முன்னதாக அளிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொண்டு கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக நிறுத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும் இதற்காக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஒரு மருத்துவக் குழுவை அமைத்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரது தாய் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்தது. அதேசமயம் குழந்தை பிறக்கும் போது உயிருடன் இருந்தால் அதற்கு சிறந்த முறையில் சிகிச்சையளித்து காக்க வேண்டும் எனவும், மனுதாரர் குழந்தையின் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்றால் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் நலன் கருதி அரசு உதவ வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குழந்தை கர்ப்பங்கள் குறித்து கவலைப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இதில் பல குற்றங்களில் நெருங்கிய உறவினர்களே உள்ளனர். மேலும் இணையத்தில் ஆபாசப் படங்கள் எளிதில் கிடைப்பது இளம் வயதினரின் மனதைத் தவறாக வழிநடத்தி அவர்களுக்கு தவறான எண்ணங்களைத் தருவதால் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து நம் குழந்தைகளுக்குக் கற்பிப்பது முற்றிலும் அவசியம் எனவும் நீதிபதி வி.ஜி. அருண் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்