"கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு" ஆனாலும் ஏழைகளின் நிலைமை இன்னும் மாறல.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்தாண்டு 6 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக நைட் பிராங்க் என்ற நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்தாண்டு 6 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக நைட் பிராங்க் என்ற நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஏழ்மை அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பணக்காரர்கள் தொடர்பான ஆய்வறிக்கை பேசுபொருளாக மாறியுள்ளது.
ஏழைகளின் நிலைமை என்ன?
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடங்கி பொருளாதார வல்லுநர்கள் வரை குற்றம்சாட்டி வருகின்றன. அதேபோல, பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆகி வருவதாகவும் ஏழைகள் இன்னும் ஏழையாகி வருவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இதை, மத்திய அரசு மறுத்து வருகிறது. விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதாகவும் வேலையின்மை குறைந்திருப்பதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது. ஏழ்மையில் இருந்து 250 மில்லியன் இந்தியர்களை வெளியேற்றி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பணக்காரர்கள் தொடர்பான அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்தாண்டு 6 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணக்காரர்கள் அதிகரிப்பு:
உலகளாவிய ரியல் எஸ்டேட் நிறுவனமான நைட் ஃபிராங்க் வெளியிட்ட அறிக்கையில், "அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் இந்தியர்களின் (10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள்) எண்ணிக்கை, கடந்த 2023ஆம் ஆண்டு, 80,686 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்கை, கடந்த 2024ஆம் ஆண்டு, 85,698 ஆக அதிகரித்துள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 93,753 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, இந்தியாவின் வளம் விரிவடைந்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் இப்போது 191 பில்லியனர்கள் உள்ளனர். அவர்களில் 26 பேர் கடந்த ஆண்டில் பட்டியலில் இணைந்தவர்கள். இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 950 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் அமெரிக்காவில்தான் பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது. அமெரிக்க பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 5.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இரண்டாம் இடத்தில் சீனா உள்ளது. சீன பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 1.34 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது" குறிப்பிடப்பட்டுள்ளது.

