Wrestler Protest: சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மல்யுத்த வீராங்கனை..! கைதாகிறாரா பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷன் சிங்..?
மதியம் 1.30 மணியளவில் பெண் அதிகாரிகள் சங்கீதா போகத்தை டெல்லியில் உள்ள பிரிஜ் பூஷனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்கின் வீட்டுக்கு பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனையை டெல்லி காவல்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் எப்படி நடந்தது என்பதை விளக்கும் வகையில் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பாஜக எம்பியின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட வீராங்கனை:
சங்கீதா போகத்துடன் பெண் காவலர்கள் சென்றுள்ளனர். மதியம் 1.30 மணியளவில் பெண் அதிகாரிகள் சங்கீதா போகத்தை டெல்லியில் உள்ள பிரிஜ் பூஷனின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அரை மணி நேரம் அங்கேயே இருந்து, விசாரணை நடத்தியுள்ளனர்.
சம்பவம் எப்படி நடந்தது என்பதை விளக்க பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இடங்களுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு வருகிறார். பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார்களை, டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணை அறிக்கையை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது.
180 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை:
விசாரணையின் ஒரு பகுதியாக, 180க்கும் மேற்பட்டவர்களிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அவர்களுடன் மத்திய அரசின் சார்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
6 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டம் ஜூன் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு முடிக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி அளித்தார். பேச்சுவார்த்தையில், 5 முக்கிய கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைத்தனர்.
மல்யுத்த வீராங்கனைகள் பாதுகாப்பு:
இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு சுதந்திரமான நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், சம்மேளனத்திற்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள் கோரி கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று கொண்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், மல்யுத்த வீரர்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் புனியா, "சில விஷயங்கள் குறித்து விவாதித்தோம். ஜூன் 15 ஆம் தேதிக்குள் காவல்துறை விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டங்களை நடத்த வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும், பெண் மல்யுத்த வீரர்களின் பாதுகாப்பும் கவனிக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறினார்" என்றார்.