வேற சாதி பையன்.. காதலருடன் சென்ற மகளை வீட்டுக்கு வரவழைத்து கொன்ற தந்தை.. கொடுமை!
வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த காரணத்தால் தனது சொந்த மகளையே அவரது தந்தை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்த காரணத்தால் தான் பெற்று வளர்த்த மகளை வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார் அவரது தந்தை. சமாதானப்படுத்துவது போல் நாடகம் ஆடி மகளை வீட்டுக்கு அழைத்து வந்து கொன்றுள்ளார் கொடூர தந்தை. வீட்டில் உள்ள பாத்ரூமில் மகளின் உடலை வைத்து பூட்டியுள்ளார்.
காதலித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:
சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து வருவதுதான் காதல். உலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமே காதல்தான். ஆனால், பல சமயத்தில் காதலுக்கு பல்வேறு வகையான ரூபத்தில் எதிர்ப்புகள் வந்துள்ளன.
இந்த நிலையில், பீகார் சமஸ்திபூரில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த காரணத்தால் தனது சொந்த மகளையே அவரது தந்தை கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சாக்சி. இவருக்கு வயது 25. இவரது தந்தை முகேஷ் சிங். இவர் முன்னாள் ராணுவ வீரர் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி, சாக்சி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவரது உடல் நேற்று இரவு அவர்களது வீட்டில் பூட்டிய குளியலறையில் இருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து சாக்சியின் தாய் மாமா விபின் குமார் கூறுகையில், "மார்ச் 4 ஆம் தேதி தனது காதலனுடன் சாக்சி டெல்லிக்கு ஓடிவிட்டார். அவர் வேறு சாதியைச் சேர்ந்தவர். இருவரும் அண்டை வீட்டுக்காரர்கள். இருவரும் ஒன்றாக கல்லூரிக்குச் சென்றனர்.
நாடகம் ஆடிய தந்தை:
ஒரு வாரத்திற்கு முன்பு, டெல்லியில் இருந்து சமஸ்திபூருக்குத் திரும்பும்படி தனது மகளை முகேஷ் சிங் சமாதானம் செய்வது போல் நாடகமாடியுள்ளார். இதற்கிடையே, சில நாட்களுக்குப் பிறகு, அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
தனது மகள் குறித்து முகேஷ் சிங்கிடம் சாக்சியின் தாயார் கேட்டுள்ளார். அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அவர் கூறினார். இருப்பினும், பின்னர் அவர் சந்தேகப்பட்டு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
பின்னர், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அவர்களது வீட்டில் பூட்டிய குளியலறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்தனர். பின்னர், அவரது உடலை குளியலறையிலிருந்து காவல்துறை மீட்டுள்ளது. முகேஷ் சிங்கிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

