Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட விளைவுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
இந்திரா காந்தி போட்ட எமர்ஜென்சி
ஆங்கிலேயர்களிடமிருந்து தந்திரமடைந்த இந்தியா, மெதுவாகவும், சீராகவும் முன்னேறிக்கொண்டிருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தினார். இந்த காலகட்டத்தில், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். அரசியல் கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட, நீதிமன்றங்களின் அதிகாரமும் குறைக்கப்பட்டது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரம் கூட கட்டுப்படுத்தப்பட்டது. இது காங்கிரஸ் மீதா அழியா கறையாக மாறியுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தின் போது கூட, எமர்ஜென்சியை குறிப்பிட்டு காங்கிரசை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். எமர்ஜென்சி காலகட்டத்தில், அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்தும் குற்றம்சாட்டப்பட்டன. எனவே, எமர்ஜென்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அந்தத் திருத்தங்கள் என்ன, அவற்றின் விளைவு என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
எமர்ஜென்சி காலத்தில் சட்ட திருத்தங்கள்:
1. 38வது திருத்தம்:
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலைக்குப் பிறகு அரசியலமைப்பில் ஒரு முக்கியமான திருத்தத்தை செய்தார், அது 38 வது அரசியலமைப்புத் திருத்தம் என்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் எமர்ஜென்சியை மறுஆய்வு செய்யும் உரிமை நீதித்துறையிடம் இருந்து பறிக்கப்பட்டது.
2. 39வது திருத்தம்
அரசியலமைப்பின் 38 ஆவது திருத்தத்தின் பின்னர் இரண்டு மாதங்களில் 39 வது திருத்தம் செய்யப்பட்டது. இந்திரா காந்தியை பிரதமராக வைத்திருக்கவே இந்த அரசியல் சட்டத் திருத்தம். உண்மையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திரா காந்தியின் தேர்தலை ரத்து செய்தது, ஆனால் இந்த திருத்தத்தின் மூலம், பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட நபரின் தேர்வை ஆராயும் உரிமை நீதிமன்றத்திலிருந்து பறிக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, பிரதமர் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தால் அமைக்கப்படும் குழு மட்டுமே விசாரிக்க முடியும்.
3. 42வது திருத்தம்:
எமர்ஜென்சியின் போது, இந்திரா காந்தியின் அரசாங்கம் 42வது திருத்தம் செய்தது, இது மிகவும் சர்ச்சைக்குரிய திருத்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம், குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் ஒப்பிடும்போது, மாநிலக் கொள்கையின் கட்டளைக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதாவது, சட்டத்திருத்தத்தின் மூலம், சாதாரண மனிதனின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்ற பெயரில் எந்த மாநிலத்திற்கும் ராணுவம் அல்லது போலீஸ் படைகளை அனுப்பும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருந்தது. இந்த சட்டத்திருத்தம் நீதித்துறையை முற்றிலும் பலவீனப்படுத்தியது.
எமர்ஜென்சிக்கு பிறகான முக்கிய மாற்றங்கள்
எமர்ஜென்சிக்குப் பிறகு, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது, அரசியல் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் முக்கியமானது 44வது திருத்தம். இதன் கீழ், அரசியலமைப்பின் அதிகாரங்களை எதிர்காலத்தில் தவறாகப் பயன்படுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம், 352வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை எழுத்துப்பூர்வமாக அத்தகைய முன்மொழிவை அனுப்பாத வரை, அவசரநிலையை பிரகடனப்படுத்த முடியாது. அவசரநிலை பிரகடனத்திற்கு ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும். அதன் பிறகும் அவசரநிலை ஆறு மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும்.