அகிலேஷ் யாதவ் மனைவிக்கு இந்த நிலைமையா? கணவரிடம் கடன்பட்ட டிம்பிள் யாதவ்.. சொத்து மதிப்பு இவ்வளவா?
கணவர் அகிலேஷ் யாதவிடம் டிம்பிள் யாதவ் 54.26 லட்சம் ரூபாய் கடன்பட்டுள்ளார். 5.1 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் 10.44 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா உலக நாடுகளின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இந்தியாவில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
கணவரிடம் கடன்பட்ட டிம்பிள் யாதவ்:
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி, காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக, முக்கிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக அதன் முக்கிய தலைவர்களே களம் இறங்கியுள்ளனர்.
கன்னெளஜ் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். மெயின்பூரி மக்களவை தொகுதியில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் களம் இறங்குகிறார்.
மே மாதம் 7ஆம் தேதி, மெயின்பூரி தொகுதியிலும் மே மாதம் 13ஆம் தேதி கன்னெளஜ் தொகுதியிலும் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, அகிலேஷ் யாதவும் டிம்பிள் யாதவும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், இருவரின் சொத்து மதிப்பு விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகிலேஷ் யாதவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
தனக்கு 26.34 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, டிம்பிள் யாதவுக்கு 15 கோடி ரூபாய் சொத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரின் மொத்த சொத்து மதிப்பு 41 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதில், சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் தனது கணவர் அகிலேஷ் யாதவிடம் டிம்பிள் யாதவ் 54.26 லட்சம் ரூபாய் கடன்பட்டுள்ளார். 9.12 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள், 17.22 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துகள் இருப்பதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
ரொக்கமாக 25.61 லட்சம் ரூபாயும் வங்கியில் 5.41 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 5.34 லட்சம் மதிப்புள்ள உடற்பயிற்சி இயந்திரங்கள், 1.6 லட்சம் மதிப்புள்ள பாத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டு வருமானமாக சராசரியாக 87 லட்சம் ருபாய் ஈட்டியதாக கூறியுள்ளார். 2022-23 நிதியாண்டில் 84.52 லட்சம் ரூபாயும் 2021-22ல் 1.02 கோடி ரூபாயும் 2020-21ல் 83.99 லட்சம் ரூபாய் வருமானம் வந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார்.
அதே சமயம், அவரது மனைவிக்கு 5.1 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் 10.44 கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டிம்பிள் யாதவின் சராசரி வருமானம் 65 லட்சம் ரூபாயாகும்.
இதையும் படிக்க: "பதட்டமா இருக்காரு.. மேடையிலேயே அழ போறாரு" - பிரதமர் மோடியை பங்கமாக கலாய்த்த ராகுல் காந்தி!