‘எழில் சூழ்ந்த இயற்கையை பாழாக்குறீங்களே' ... டாஸ்மாக்கே வேண்டாம் கொதிக்கும் மலைவாழ் மக்கள்
இயற்கை, சுற்றுச் சூழலை பாதுகாக்க, மதுபான கடையை இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தல்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலை, கடல் மட்டத்திலிருந்து 3,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் சித்தேரி, பெரேரி புதூர், சூரியகடை, சூளுக்குறிச்சி, மண்ணூர், தோல்தூக்கி, கலசப்பாடி, அரசநத்தம் உள்ளிட்ட அறுபத்தி நான்கு மலை கிராமங்கள் அமைந்துள்ளது.
இந்த மலை கிராமத்தில் முழுக்க முழுக்க பழங்குடியின மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். மலை மீது கிராமம் இருப்பதால், ஊட்டி, கொடைக்கானல் போல எப்பொழுதும் குளிர்ந்த சீதோசன நிலையே இருந்து வருகிறது. சித்தேரி மலை, நகர் பகுதிக்கு மிக அருகில் இருப்பதால், தரைப்பகுதியில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா செல்வது போல், சித்தேரி மலைக்கு சென்று அந்த குளிர்ந்த சீதோசன நிலையில் சுத்தி பார்த்துவிட்டு வருகின்றனர். இந்த மலை கிராமத்தில் சாமை, தினை, கேழ்வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைகின்ற சிறுதானியங்கள் முழுமையும் மலையிலிருந்து, அரூர் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஒரு சில வியாபாரிகள் மலை மீது சென்று குறைந்த விலைக்கு மலைவாழ் மக்களிடம் வாங்கி செல்கின்றனர்.
மேலும் சித்தேரிலேயே அரசு மருத்துவமனை, அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இதனால் 63 கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஆண்டு முதல் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சித்தேரி பேருந்து நிறுத்தம் அருகே அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இந்த மது கடையில் மலை மீது இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது தரைப்பகுதியில் இருந்து ஏராளமானோர் இரு சக்கர வாகனங்கள் கார்களில் சென்று மலை மீது மது வாங்கி அந்த குளிர்ந்த சீதோசன நிலையில் அமர்ந்து மது அருந்துவது அதிகரிக்க தொடங்கி வருகிறது. இவ்வாறு மது அருந்துபவர்கள் ஆங்காங்கே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்து விட்டு வருகின்றனர்.
இந்த பிளாஸ்டிக் பொருட்கள் விவசாய நிலங்களிலும், மலைப் பகுதியில் ஆங்காங்கே இருப்பதால், மேச்சலுக்கு செல்லும் கால்நடைகள் அதனை உண்டால், கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்ற சூழல் இருந்து வருகிறது. மேலும் விவசாய நிலங்களில் எறிந்து விட்டுச் செல்வதால், விவசாயமும் பாதிக்கப்படுகின்ற சூழலில் இருந்து வருகிறது.
அதேபோல் சித்தேரி மலை மீது உள்ள குளம் அருகே எழில் மிகு இயற்கை சூழல் அமைந்துள்ள பகுதியில் அரசு உடற்பயிற்சி மற்றும் பொழுது பூங்காவை அமைத்துள்ளது. இந்த பூங்கா முழுவதும் தற்பொழுது மது அருந்துவது கூடாரமாக மாறி உள்ளது. இந்த பூங்கா முழுவதும் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், வாட்டர் பாட்டில்கள் என குவிந்து கிடக்கிறது. இங்குள்ள மது பாட்டில்கள், பூங்காவில் அடுக்கி, காட்சி பொருளாக கோபுரம் போன்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கை எழில் மிகுந்த இந்த சித்தர் மலை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுகின்ற வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்ட இடங்களில் தேங்கி வருகிறது.
இயற்கைக்காக சித்தேரி மலைக்கு வரும் மதுப்பிரியக்ஷர்களால் இந்த இயற்கைக்கு கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தத்தில் அரசு மதுபான கடை இருப்பதால், பேருந்து இறங்கியும் பேருந்து ஏறுவதற்கும் பள்ளி குழந்தைகள் பெண்கள் என வந்த வழியாக கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மலைப் பகுதியில் பள்ளி முடிந்து பெண் பிள்ளைகள் தனியாக காட்டுப் பகுதியில் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் இந்த மதுக்கடை இருப்பதால், மது பிரியர்களால் பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்ற நிலை இருந்து வருகிறது.
எனவே இயற்கையை சித்தேரி மழை மீது உள்ள இயற்கையை பாதுகாக்கவும், மலை கிராம மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்க அரசு மதுபான கடையை சித்தேரி மலையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சித்தேரி மலை கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.