Coimbatore: கோவை மேயர் கல்பனா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்.. பாதுகாப்பு வழங்க கோரி இளம்பெண் கோரிக்கை..!
வீட்டை காலி செய்ய வைப்பதற்காக அழுகிய பொருட்களை வீசுவதாகவும், சமையலறை அருகில் சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும் புகார் எழுந்த நிலையில், அது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மணியகாரம்பாளையம் நட்சத்திரா கார்டன் பகுதியில் வசிப்பவர் சரண்யா. தஞ்சாவூரைப் பூர்விகமாக கொண்ட இவர், தனது கணவர் கோபிநாத் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் தம்பி குமார், அவரது தாயார் காளியம்மாளுடன் வசித்து வருகிறார்.
கோவை மேயர் மீது புகார்:
இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக கோவை மாநகர மேயர் கல்பனாவும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தங்காமல், தனது தம்பி குமாரின் இல்லத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மேயர் கல்பனா தங்கியிருக்கும் அந்தக் காம்பவுண்டில் நான்கு வீடுகள் இருக்கும் நிலையில், இரண்டு வீடுகளில் அவர்களது உறவினர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேயர் கல்பனா இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், அந்த காம்பவுண்டில் இருந்து சரண்யாவை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.
அழுகிய பொருட்கள், சிறுநீர்:
சரண்யா வீட்டை காலி செய்ய வைப்பதற்காக அழுகிய பொருட்களை வீசுவதாகவும், சமையலறை அருகில் சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும் புகார் எழுந்த நிலையில், அது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேயர் கல்பனா குடும்பத்தினர் தொல்லை கொடுத்து வரும் விவகாரம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சரண்யா இன்று புகார் அளித்தார்.
அதில் மேயர் கல்பனா குடும்பத்தினரால் தங்களது குடும்பத்துக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதன் பின்னர் சரண்யா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேயர் கல்பனா குடும்பத்தினர் செய்யும் அவலங்களை வீட்டின் பொறுப்பாளரிடம் சொல்லியும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
பாதுகாப்பு வேண்டும்:
வீட்டின் பொறுப்பாளர்கள் மற்றும், மேயர் குடும்பத்தினர் குழந்தைகள் முன்பு தவறான வார்த்தைகள் பேசி தங்களை அச்சுறுத்துகின்றனர். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. அதனால் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஊடகங்களில் செய்தி வெளி வந்த பின்பு, துடியலூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என நேற்றிரவு அழைத்தார்கள். அதன் பின்பே மேயர் குடும்பத்தின் தரப்பில் எங்கள் மீது புகார் கொடுத்து இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்து இருக்கிறோம். மாநகர காவல் ஆணையர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தி இருக்கின்றார்.
மன உளைச்சல்:
இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நின்று தவறான வார்த்தைகளை பேசுகின்றனர். குழந்தைகள் முன்பு தவறாக பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர். நாங்கள் வசிக்கும் வீட்டை மேயர் குடும்பத்தினர் அடையாளம் தெரியாதவர்களை வைத்து கண்காணிக்கின்றனர். என் பக்கம் நியாயம் இருக்கின்றது என்பதால் போராடுகின்றேன். எங்கள் வீட்டை ஹெல்மெட் அணிந்து வரும் நபர்கள் கண்காணிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்திகள் வெளி வந்த பின்பு தான், மேயர் குடும்பத்தினர் அதிகமான மன உளைச்சல் கொடுக்கின்றனர். இது தொடர்பாக திமுக தலைமையில் இருந்து எங்களிடம் இதுவரை பேசவில்லை. எங்களுக்கு நிகழ்ந்த அவலம் குறித்து மனித உரிமை ஆணையம், முதல்வர் தனிப்பிரிவு போன்றவற்றில் புகார் அளித்து இருக்கின்றோம். இப்போது மாநகர காவல் ஆணையரிடமும் புகார் கொடுத்து இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.