கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை, ஊட்டி சாலையில் யானைகளுக்காக உயர் மட்ட பாலம் உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க. தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி (80) நுரையீரல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். வடவள்ளி பகுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருகை தர உள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் - ஊட்டி சாலையை யானை உள்ளிட்ட வன விலங்குகள் எளிதாக கடந்து செல்லவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் கல்லார் தூரிப் பாலத்தில் இருந்து மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு வரை உயர் மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 2.4 கிலோ மீட்டர் தூரம் பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோடநாடு வழக்கில் கைதான தனபால் மற்றும் ரமேஷ்க்கு மேலும் இரண்டு வார காலத்திற்கு நீதிமன்ற காவலை நீட்டித்து ஊட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் 4 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நேற்று கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக 1500 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.
கோவையில் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் இரண்டு இலக்கமாக குறைந்துள்ளது. 100 க்கும் குறைவான தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலியாக தமிழ்நாடு - கேரளா எல்லையான வாளையாரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, போத்தனூர் இரயில் நிலையங்களை சேலம் இரயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும், திருச்செந்தூர் விரைவு இரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும் வருகின்ற 27 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை வருகின்ற 29 ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சேலத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பரின் மகன் மணிகண்டன் வீட்டில் நேற்று 12 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று சேலம், நாமக்கல், ஈரோட்டில் 16 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
கைத்தறி நெசவு துணிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவதை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் வழி தவறி வந்து கடைக்குள் புகுந்த சிறுத்தை பூனைக் குட்டியை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுத்தை பூனைக் குட்டி வனப்பகுதியில் விடப்பட்டது.