தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி படுகொலை: மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு!
மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதட்டமான சூழல்நிலவி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே தனியார் பள்ளி ஒன்றின் முன்பு, காரில் சென்று கொண்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
சம்பவம் நடந்தது எப்படி?
இன்று மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர் நியமன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு காரைக்கால் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறனும் கலந்துகொண்டார். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டப் பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருவதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்த பின்னர், மணிமாறன் தனது காரில் காரைக்காலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாயிலின் அருகே, இரண்டு கார்களில் மணிமாறனை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் அவரது காரை வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் மணிமாறனை, அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த கொடூரத் தாக்குதலில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல் துறையின் முதல் கட்ட விசாரணை
இந்த கொடூரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர் நேரில் சென்று முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினார். சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த தடயங்களைச் சேகரித்து, அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்தார். மணிமாறனின் உடல் உடனடியாக உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இந்தக் கொலைக்கான காரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவமணி கொலை வழக்கில் மணிமாறன் முதல் குற்றவாளி என்பதால், அந்தக் கொலையின் பின்னணியில் பழிவாங்கும் நடவடிக்கை இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மணிமாறனின் தனிப்பட்ட விரோதங்கள் அல்லது கட்சி ரீதியான பிரச்சனைகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் காவல் துறையினர் துருவி வருகின்றனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட கும்பல் யார், அவர்களுக்கு யார் பின்னணி என்பதும் குறித்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
மயிலாடுதுறையில் பதற்றம்
இந்த பட்டப்பகல் படுகொலை சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிக்கு அருகே ஒரு அரசியல் கட்சி நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டிருப்பது, சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கைகள்
தொடர்ந்து காவல் துறையினர் ஐந்து தனிப்படைகளை அமைத்து, கொலையாளிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளின் அடையாளங்களைத் துப்பு துலக்கி வருகின்றனர். இந்தக் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.























