தமிழ்நாட்டில், மேற்கு மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்..
கோடநாடு வழக்கு விசாரணை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் விபத்து வழக்கில் மறு விசாரணை, கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோரிடமும் நீலகிரி காவல் துறையினர் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். மேலும் இவ்வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சதீசன் மற்றும் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிஜின்குட்டி ஆகியோரிடமும் நேற்று தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பத்து பேரில் இதுவரை 6 பேரிடம் கூடுதல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோரை இன்று விசாரணைக்கு ஆஜாராகுமாறு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், வழக்கில் விசாரணை வேகமெடுத்துள்ளது.
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் விபத்து வழக்கில், மீண்டும் விசாரணை நடத்த நீலகிரி தனிப்படை காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் மனைவி கலைவாணி ஆகியோர் குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் நேற்று கொரோனா தொற்று பாதிப்புகள் சற்று குறைந்தது. இதேபோல திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்தது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிறு குன்றா பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் மது போதையில் தகராறு செய்ததாக வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் கைது செய்யப்பட்டார். வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரனின் விருந்தினர்களிடம் தகராறு செய்ததோடு, இரவு நேரத்தில் தங்கும் விடுதியில் இருந்து வெளியேற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வனச்சரகர் மீது நீதித் துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய் வழக்கு போட்டதாக கூறி, ஆனைமலை புலிகள் காப்பக வன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் 80 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால், கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.
கோவை லாலி ரோடு பகுதியில் துர்கேஷ் என்ற ஒரு வயது குழந்தையின் வாயில் பிஸ்கட் கவரை திணித்து கொடூரமாக கொலை செய்த, குழந்தையின் பாட்டி நாகலட்சுமியை ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் கைது செய்தனர். அடிக்கடி அழுது கொண்டு சேட்டை செய்ததால் கொலை செய்ததாக கைதான நாகலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் தொப்பூர் செக்காரப்பட்டி சேவை மையத்தில் தர்மபுரி மாவட்டம் பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் 187 பவுன் நகையை அடகு வைத்து ரூ. 41 லட்சம் கடன் வாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கூட்டுறவு மையத்தின் கணக்காளர் கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். இதற்கிடையே வெங்கடேசன் தர்மபுரியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ. 15 லட்சம் நகை கடன் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை அம்பலமூலா பகுதியில் உலா வரும் புலியினை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10க்கும் மாடுகளை புலி அடித்துக் கொன்றுள்ளது என அக்கிராம மக்கள் புகார் தெரிவித்திருந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.