Super Hit Movie's 2nd Part: திரும்பி வரும் ராம், ஜானு; சூப்பர் டூப்பட் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்த இயக்குநர்
இளம் ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்த ‘96‘ படத்தின் 2-ம் பாகத்தை அதன் இயக்குநர் உறுதி செய்து, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி, ரசிகர்களை மயக்கி சூப்பர் ஹிட் அடித்த ‘96‘ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை முடித்து விட்டதாக இயக்குனர் பிரேம் குமார் கூறியுள்ளது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரும்பி வரும் ராம், ஜானு
ப்ரேம் குமார் இயக்கத்தில் வெளியான ‘96‘ படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மாபெரும் வெற்றியடைந்தது. அந்த படத்தில், ராம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானு கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்தார்கள் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை இயக்குநர் பிரேம் குமார் உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக, ‘96‘ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஸ்க்ரிப்ட் வேலைகளை முடித்துவிட்டதாக இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்து, விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
படம் குறித்த மற்ற விவரங்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில், ராம் மற்றும் ஜானுவின் வரவை ரசிர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சூப்பர் ஹிட் அடித்த ‘96‘ திரைப்படம்
2018-ம் ஆண்டு, விஜய் சேதுபதி, த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்திலும், தேவதர்ஷணி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘96‘.
சி. பிரேம் குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தை மெட்ரோஸ் என்டர்பிரைஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்திருந்தார்.
1996-ல் ஒன்றாக பள்ளியில் படிக்கும் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்து, 22 ஆண்டுகளுக்குப் பின், ரீ-யூனியன் நிகழ்வின்போது மீண்டும் சந்திக்கும் போது, ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் ‘96‘ திரைப்படம். 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், சுமார் 50 கோடி ரூபாய் வசூலை அள்ளியத.
இதில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தன. இதனால், இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், தற்போது இயக்குநர் பிரேம் குமார், ‘96‘ படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்திருப்பதால், ராம் மற்றும் ஜானுவை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்களுக்கு ஆவலை தூண்டியுள்ளது.
மேலும், இதன் பிறகு கதைக்களம் எந்த திரையில் போகும் என்றும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















