Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்துவந்த நிலையில், தந்தையிடம் மன்னிப்பு கோரியுள்ளார் அன்புமணி. இதையடுத்து, பாமக-வில் குழப்பம் தீருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்று, திருவள்ளூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, தனது தந்தையும், பாமக நிறுவனருமான ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமாக பேசியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன.?
பொதுக்குழு கூட்டத்தின்போது பேசிய அன்புமணி ராமதாஸ், ரமதாசுக்கு தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். அதோடு, “என் மீது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள், தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல‘‘ என கூறினார்.
மேலும், தேசிய தலைவர், நாட்டின் மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என்றும், ராமதாஸ் ஐயா டென்ஷன் ஆக வேண்டாம், வருத்தப்படாதீர்கள் என்று கூறிய அன்புமணி, “நீங்கள் உருவாக்கிய கட்சி இது.. நீங்கள் கோபப்படக் கூடாது, கடினமாக காலங்களை கடந்து வந்தவர், பல தியாகங்களை செய்தவர் ராமதாஸ்“ என புகழாரம் சூட்டினார்.
அது மட்டுமல்லாமல், “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக நான் செய்கிறேன்“ என உருக்கமாக கூறியுள்ளார்.
ராமதாஸ்-அன்புமணி இடையே இருந்துவந்த மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சமீப காலமாக மோதல் போக்கு இருந்துவருகிறது. சமீபத்தில், அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து தூக்கினார் ராமதாஸ். ஆனால், அதை ஏற்க மறத்த அன்புமணி, நானே தலைவர் என கூறி, தனது ஆதரவாளர்களை தனியே சந்தித்தார்.
இதனால் கோபமடைந்த ராமதாஸ், சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து, அன்புமணி குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்தார். 2026 தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்கிறேன் என கூறியிருந்தேன், ஆனால், மைக்கை வீசி அடிப்பது, தாய் மீது பாட்டிலால் அடிப்பது உள்ளிட்ட அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது, என இறுதி மூச்சு இருக்கும் வரை அவருக்கு தலைவர் பதவி கொடுக்க மாட்டேன், நான்தான் தலைவராக இருப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
அதற்கும் ஒரு படி மேலே போய், எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியில் எந்த பொறுப்பிற்கும், அரசியலுக்கும் வரக் கூடாது என கட்சி தொடங்கும் போது நான் சொன்னேன், ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை என்று கூறியதோடு, அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கட்சி நிர்வாகிகள் கூறியதால், 35 வயதிலேயே அன்புமணியை மத்திய அமைச்சராக்கினேன், உலக அளவில் அன்புமணி விருது வாங்கினால், ஆனால் தற்போது தந்தையிடம் விருது வாங்க முடியாமல் இருக்கிறார் என விமர்சித்தார் ராமதாஸ்.
தந்தை, தாயை மதிக்க வேண்டும் என்று கூறினால் அன்புமணிக்கு கோபம் வருகிறத என்றும், 100 ஆண்டுகள் இருப்பீங்க என்று கூறிவிட்டு, அன்புமணி என் மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டார் என்றும், அதனால், தூக்க மாத்திரை போட்டாலும எனக்கு தூக்கம் வருவதில்லை என்று வேதனை தெரிவித்தார் ராமதாஸ். மேலும், மன்னிப்பு கேட்டுவிட்டு செயல் தலைவராக அன்புமணி தொடரட்டும் என ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ராமதாஸிடம் அன்புமணி மன்னிப்பு கேட்டுள்ளார். இது, பாமக-வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.






















