(Source: ECI/ABP News/ABP Majha)
இயற்கை வளத்தை காப்பாற்ற ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்த பாமக, விசிக கட்சிகள்...!
மலையிலிருந்து மண்ணை அள்ளுவதை கண்டித்து பாமக மற்றும் விசிக தொண்டர்கள் நடத்திய போராட்டம் பேசு பொருளாகி உள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சியும் , பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரு காலத்தில் இணைந்து செயல்பட்ட கட்சிகளாக இருந்தாலும். கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. அதன் பிறகு விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி எதிரும் புதிருமாக தேர்தலை சந்தித்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில தேர்தல்களில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் இரண்டும் ஒரே கூட்டணியில் இருக்காது என்ற அளவிற்கு இரு கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. வட தமிழ்நாட்டில் கணிசமான செல்வாக்கு கொண்ட இரண்டு கட்சிகளும் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்கு உட்பட்ட தண்டரை ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து நடத்திய போராட்டம் பேசுபொருள் ஆகியுள்ளது.
என்ன பிரச்சனை
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருக்கழுகுன்றம் அடுத்த தண்டரை ஊராட்சியில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலங்கள் வருவாய் துறையிடம் இருந்து தமிழக அரசின் சிட்கோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. ஆனாலும், சிட்கோ பணிகள் மந்தமாகவே நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில வாரங்களாக சிட்கோவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள பள்ளமான பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இருந்து மண்ணை எடுத்துள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் மண் அள்ளும் பணிகள் நடைபெற்றுள்ளன. இதற்காக வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இருந்து மண்ணை எடுத்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இருந்தும் மீண்டும் மண் அள்ளும் பணிகள் நடைபெற்றுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, மலைப் பகுதியில் சிட்கோ நிறுவனம் மண் எடுப்பதை ரத்து செய்யுமாறு தண்டரை ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தண்டரை ஊராட்சியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நில புல எண் 182/2, 183/ஏ, 183 பி/2, 183 பி/4 உள்ள இடங்களில் உள்ள மலைப் பகுதியை சிட்கோ நிறுவனமானது, மலையையும் மரம், செடி, கொடிகள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் எடுத்து வருகின்றனர். இதனால் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஆடு, மாடுகள், மயில், மான்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மண் அள்ளும் பணி நடைபெற்று உள்ளது. இதனையறிந்த விசிகவை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவி ஜெயலட்சுமி அறிவழகன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த துணை தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் தலைமையில் சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பாமகவை சேர்ந்தவர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விசிக, பாமக கட்சிகள் இணைத்து தங்களது கொடிகளுடன் போராட்டம் நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்து வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கட்சிகளின் ஒற்றுமை
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி கூறுகையில், எங்கள் பகுதியில் சிப்காட் அமைவதால் எந்த எதிர்ப்பும் நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் எங்கள் கிராமத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் மலையை உடைத்து அதிலிருந்து, மண்ணை எடுப்பதற்கு தான் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதுமட்டுமின்றி விதிகளை மீறி மலையில் இருந்து மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். 1250 ஓட்டுகள் பதிவாகி இருந்தது, அதில் நாங்கள் சுமார் 960 வாக்குகளைப் பெற்றோம். எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக மற்றும் திமுகவை சார்ந்த தலைவர்கள் படுதோல்வி அடைந்தனர். பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களித்தனர். நாங்களும் அவர்களுக்கு துணை தலைவர் பதவிக்கு எங்களுடைய வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். மக்கள் பிரச்சினைக்காக இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஊராட்சி துணை தலைவர் தெய்வசிகாமணி கூறுகையில், ஏற்கனவே எங்கள் ஊரில் மேய்க்கால் புறம்போக்கு இருந்த இடத்தில் சிப்காட் வருகிறது. மலையை ஒட்டி உள்ளதால் அதிக அளவு மழை பெய்யும் காலங்களில் சுமார் 4 மாதங்களுக்கு, கிராம மக்களின் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும் இருக்கும் இடத்தில் மண்ணை எடுப்பது நியாயம் கிடையாது. எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு மற்றுமின்றி காட்டில் வாழும் மான் மற்றும் மயில் உள்ளிட்ட பாதிக்கப்படும் எனவே நாங்கள் போராட்டம் நடத்தினோம். கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தொடர்பாக தங்களுக்கு மனு வந்து இருப்பதாகவும், அது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அரசியலில் எதிர் துருவமாக இருக்கும் இரண்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்கள் பிரச்சினைக்காக இணைந்து போராடியது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.