Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
பொறியில் படிப்பில் சேர்வதற்கான நடைபெற்ற முதல் சுற்று கலந்தாய்வில் 142 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் எப்போதும் பொறியியல் படிப்புக்கான மரியாதை இருந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக பொறியியல் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும், பொறியியல் படிப்புகள் மீது தொடர்ந்து ஆர்வத்துடன் சிலர் சேர்ந்து வருகின்றனர்.
பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்:
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தற்போது பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கலந்தாய்வின் முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையே காட்டி வருகிறது.
142 கல்லூரிகளில் நோ சீட்:

தற்போது நடந்து முடிந்த முதல் சுற்று கலந்தாய்வில் 28 ஆயிரத்து 896 பேர் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த கலந்தாய்வில் மொத்தம் 425 கல்லூரிகள் பங்கேற்றன. ஆனால், அதில் 142 கல்லூரிகளில் ஒருவர்கூட பொறியியல் படிப்பில் சேரவில்லை.
கம்யூட்டர் சயின்ஸிலே ஆர்வம்:
தற்போது நடைபெற்று முடிந்த முதல் சுற்று கலந்தாய்வில் பலரும் கணினி அறிவியல் படிப்பையே தேர்ந்தெடுத்துள்ளனர். அதாவது, 36 ஆயிரத்து 748 கணினி அறிவியல் சீட்டுகளில் 7 ஆயிரத்து 526 சீட்டுகளைத் தேர்வு செய்துள்ளனர். அதாவது, கலந்தாய்வில் 20.5 சதவீத கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளனர்.
சிவில் எஞ்ஜினியரிங் பரிதாபம்:
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பொறியியல் படிப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட 25 ஆயிரத்து 864 சீட்டுகளில் 4 ஆயிரத்து 534 சீட்டுகள் நிரம்பியுள்ளது. ஏஐ மற்றும் டேட்டா அறிவியல் படிப்பிற்கு ஒதுக்கப்பட்ட 22 ஆயிரத்து 767 சீட்டுகளில் 3 ஆயிரத்து 208 சீட்டுகள் மட்டுமே நிரம்பியுள்ளது.

ஐடி துறையில் 2 ஆயிரத்து 635 சீட்டுகளும், எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் 1506 மாணவர்களும், மெக்கானிக்கல் படிப்பில் 1055 மாணவர்களும், சிவில் இன்ஜினியரிங் படிப்பில் 619 மாணவர்களும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
காலியாக இருக்கும் இடங்கள்:
எதிர்பார்த்தை விட மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாகவே அமைந்துள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் பொது கலந்தாய்வு பிரிவில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 241 இடங்கள் பொறியியல் படிப்புகளில் காலியாக உள்ளது. 30 சதவீத கல்லூரிகளில் மட்டுமே 60 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளது.
ஆர்வம் காட்டாத மணவர்கள்:
பொறியியல் படிப்புகளின் மீது இருந்து வந்த மோகம் குறைந்ததும், மற்ற படிப்புகள் மீது மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வமே இதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது. விண்வெளி, வேதியியல், உயிரி தொழில்நுட்பம் போன்ற படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் குறைவாகவே காட்டி வருகின்றனர். குறிப்பாக, பீங்கான், ரப்பர் பிளாஸ்டிக், ஜவுளி, பெட்ரோலியம், தோல் பேஷன் டெக், மருந்து போன்ற துறைகளில் யாருமே சேரவில்லை.
முதல் சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 2ம் சுற்று கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. இந்த கலந்தாய்வு நேற்று இணையதளம் மூலமாக தொடங்கியது. பொதுப்பிரிவில் பங்கேற்க 98 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகளுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் பங்கேற்க 16 ஆயிரத்து 259 மாணவ, மாணவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





















