Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 AD Review in Tamil: பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனத்தைப் பார்க்கலாம்.
Nag Ashwin
Prabhas , Amitabh Bachchan , Kamalhaasan , Deepika Padukone , Anna Ben , Shobana , Disha Patani , Malvika Nair , Pasupathy , Dulquer Salman , Keerthi Suresh
Theatrical Release
கல்கி ( Kalki 2898 AD Movie Review)
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள கல்கி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியிருக்கும் கல்கி படத்தின் திரை விமர்சனத்தைப் பார்க்கலாம்.
கல்கி படத்தின் கதை
மகாபாரதப் போரில் கெளரவர்கள் சார்பாக பாண்டவர்களை எதிர்த்து போரிடுகிறார் த்ரோணாச்சாரியார் மகன் அஸ்வத்தாமா. தன் மிகப்பெரிய ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை வைத்து பாண்டவர்களுக்கு பிறக்கவிருந்த குழந்தையை வயிற்றிலேயே கொல்கிறார். கோபமடைந்த கிருஷ்ணன் அஸ்வத்தாமாவுக்கு சாகாவரத்தை தண்டனையாக வழங்குகிறார். கலியுகத்தில் கிருஷ்ணன் மீண்டும் அவதாரம் எடுக்கும்போது அஸ்வத்தாமா காப்பாற்றினால் மட்டுமே தனது இந்த சாபத்தில் இருந்து அவர் மீள முடியும் என்பது மகாராபாரதக் கதை.
பாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது கல்கி படத்தின் கதை. உலகத்தின் முதலும் கடைசியுமான நகரமாக மிஞ்சியிருக்கிறது காசி. மக்கள் அனைவரும் சுப்ரீம் யாஸ்கினின் (கமல்ஹாசன் ) கொடுங்கோள் ஆட்சிக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள். ஒருபக்கம் கங்கை நதி வற்றி கடவுள்களை கைவிட்டு பஞ்சத்திலும் பசியிலும் வாழ்கிறார்கள் மக்கள். மறுபக்கம் அதிகாரம், செல்வம் படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பான ’காம்பிளக்ஸ்’ என்கிற தங்களுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் தனி உலகில் வாழ்கிறார்கள். எப்படியாவது இந்த காம்பிளக்ஸிற்குள் தேவையான பணத்தை சேர்த்து தானும் செளகரியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே நாயகன் பைரவாவின் ( பிரபாஸ்) ஒரே கனவு.
சுப்ரீம் யாஸ்கினின் அரசை அழித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட மக்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை கல்கியாக பிறக்க இருக்கும் குழந்தைதான். இந்தக் குழந்தையை சுமக்கிறார் சுமதி ( தீபிகா படுகோன்). எப்படியாவது இந்தக் குழந்தையை அழித்து பிராஜெக்ட் கே என்கிற தனது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறார் யாஸ்கின். அதே குழந்தையைக் காப்பாற்றி தனது சாபத்தை விடுவிக்க பல ஆண்டுகளாக காத்திருக்கிறார் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்). இந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதன் வழியாக தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார் பைரவா.
அஸ்வத்தமா தனது சாபத்தில் இருந்து மீண்டாரா? சுப்ரீம் யாஸ்கினின் பிராஜெக்ட் கே திட்டம் என்ன ? பைரவா தனது ஆசையை நிறைவேற்றினாரா என்பதே கல்கி படத்தின் கதை.
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகள்
கல்கி படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் படத்தின் ஸ்ச்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் தான். பிரபாஸ் நடித்த முந்தைய படமான ஆதிபுருஷ் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டன. இவ்வளவு பணம் செலவிட்டும் இவ்வளவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தியும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கிராஃபிக்ஸ் காட்சிகளின் தரம் குறித்த பல கேள்விகள் இருந்ததன. இந்த எல்லா கேள்விகளுக்கும் கல்கி படம் பதில் சொல்லும்படி அமைந்துள்ளது.
இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்ஷன் வகைமையோடு இணைத்து நம்பகத்தன்மையான ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். மேட்மேக்ஸ், டியூன், ஸ்டார் வார்ஸ் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் சாயல்களை பல இடங்களில் பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் அதிநவீனமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் கதாபாத்திரங்கள், இன்னொரு பக்கம் புராணக் கதைகளில் வரும் அசாத்திய சக்திகளை கொண்ட கதாபாத்திரங்கள் என அறிவியலையும் கற்பனையையும் இணைத்திருப்பது தான் கல்கி படத்தின் தனிச்சிறப்பு.
பிரபாஸ் ஓட்டும் வாகனமான புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருப்பது, மிருணால் தாக்கூர், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஜமெளலி என படத்தில் சின்ன சின்னதாக நிறைய சுவாரஸ்யமான அம்சங்களை சேர்த்திருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்தில் வரும் குருக்ஷேத்திர போர் காட்சிகள் தொடங்கி க்ளைமேக்ஸ் வரை அசாத்தியமான ஒரு உலகத்தை நம் கண் முன்னாள் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் ப்ரோடக்ஷன் டிசைனர் நிதின் ஜிகானி மற்றும் ஒளிப்பதிவாளர் Djordje Stojiljkovic இருவரும் தங்கள் அசாத்திய உழைப்பால் இயக்குநர் நாக் அஸ்வினின் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. பைரவாக்கு ராக் இசை என்றால், அஸ்வத்தாமாவுக்கு கர்னாடக இசை என கலந்துகட்டி அடித்திருக்கிறார்.
நடிப்பு
முதல் பாகத்தைப் பொறுத்தவரை ரசிகர்கள் மனதின் பதியும்படியான கதாபாத்திரம் என்றால் அமிதாப் பச்சன் நடித்துள்ள அஸ்வத்தாமாவை சொல்லலாம். 8 அடி உயரத்திற்கு கிரேக்க கடவுளைப் போல் இருக்கும் அவரது தோற்றத்தில் இருந்து கண்களை எடுக்க முடிவதில்லை. படத்தில் உணர்வுப்பூர்வமாக பார்வையாளர்கள் ஒன்றும் ஒரே கதாபாத்திரம் அஸ்வத்தாமாவுடையது.
ஆக்ஷன் காட்சிகளில் பிரபாஸ் நம்மை எங்கேஜ் செய்கிறார். ஆனால் அவரது கதாபாத்திரம் நகைச்சுவைத் தன்மை கொண்டதாக எழுதப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் இந்த காமெடிகளின் டைமிங் மிஸ் ஆகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபாஸின் கதாபாத்திரத்திற்கு ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இந்த ட்விஸ்ட் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை.
இரண்டே காட்சிகளில் மட்டுமே நாம் கமல்ஹாசனை பார்க்கிறோம். ஆனால் கமலின் கண்களை மட்டும் காட்டினாலேயே ஒட்டுமொத்த திரையரங்கும் அதிர்கிறது. கமலின் யாஸ்கின் கதாபாத்திரத்திற்கு தலையே முதன்மையானதாக இருக்கிறது. அதில் வெறும் இரண்டு கண்களையும் குரலையும் வைத்தே நம்மை கட்டிப்போட்டு விடுகிறார். இரண்டாம் பாதியில் கமலின் காட்சிகள் மிரளவைக்கும் என்று நிச்சயம் சொல்லலாம்.
படத்தின் மொத்த உணர்ச்சியையும் தாங்கிச் செல்லக்கூடிய கதாபாத்திரம் தீபிகா படுகொன் நடித்துள்ள சுமதி. ஆனால் இதில் நடிப்பிற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாதது வருத்தமே. அதேபோல் ஷோபனா, பசுபதி, அனா பென் ஆகியவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாகவே நடித்துள்ளார்கள். திஷா பதானியின் ராக்ஸி ஒரு தேவையற்ற இணைப்பாக வந்து போகிறது.
விமர்சனம்
தொழில்நுட்ப்ரீதியாக படம் கைதட்டல்களையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் பொதுவாக ஹாலிவுட் படங்களின் திரைக்கதை வடிவத்தையே கல்கி படம் பின்பற்றியிருக்கிறது. இத்தனை விதமான நடிகர்கள் மற்றும் பிரமாண்டமான கதைப்பரப்பை வைத்து இன்னும் நுணுக்கமான வழியில் கதை வழிநடத்தியிருக்கலாம். அமிதாப் பச்சன் தவிர்த்து பார்வையாளர்களுக்கு மற்ற கதாபாத்திரங்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு இல்லாதது படத்தின் பெரிய மைனஸ். வசனங்கள் பெரும்பாலும் நேரடித்தன்மையுடன் இருப்பது சீரியல் உணர்வைத் தருகிறது.
ஆக்ஷன் காட்சிகளே படத்தின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. அதுவும் பெரும்பாலும் ஸ்டார் வார்ஸில் வரும் லேசர் துப்பாக்கிச் சண்டையாக நம்மை ஈர்ப்பதில்லை. ஆக்ஷன் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதாபாத்திரங்களின் உணர்ச்சியை பலப்படுத்துவதில் கொடுத்திருக்கலாம்.
பிரபாஸின் கல்கி அதன் பிரம்மாண்டமான பட்ஜெட்டிற்கு முழு நியாயத்தை சேர்த்திருக்கிறது. முதல் பாகத்தின் பெரும்பகுதி கதை நடக்கும் உலகத்தை நமக்கு புரியவைப்பதற்கான போதுமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. முக்கிய வில்லனான சுப்ரிம் யாஸ்கினின் எழுச்சியுடன் முடியும் முதல் பாகம் ‘பிராஜெக்ட் கே’ என்பது என்ன என்கிற மர்மத்தோடு இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.