கர்ணன் திரைப்படத்தில் காதல் ஒரு உந்துசக்தி - கார்த்திகேயன் ஃபாஸ்ட்யூரா..
கர்ணன் படத்தில் காதல் ஒரு உந்துசக்தியாகவே இருந்திருக்கிறது. பெண்கள் மனவலிமையோடு காண்பிக்கப்படுகிறார்கள்.
Mari Selvaraj
Dhanush Rajisha Vijayan Natarajan Lal Yogi Babu
கர்ணன் படத்தில் காதல் ஒரு உந்துசக்தியாகவே இருந்திருக்கிறது. பெண்கள் மனவலிமையோடு காண்பிக்கபடுகிறார்கள். மஞ்சனத்தி புருஷனாக வரும் ஏமராஜா (லால்) ஒரு இழவு கொண்டாட்டத்தில் இளவயதில் இறந்துபோன தன் மனைவி மீதான காதலை பாடலாக பாடுகிறார். அந்த பாடலில் மஞ்சணத்தி எப்படி தன்னை தலைநிமிர்ந்து சுயமரியாதையோடு நடக்க வைத்தாள் என்பதை "என் கக்கத்தில வச்ச துண்டை தோளு மேல போட்டுவிட்டா, தோரணையா நானும் நடக்க வாலிபத்தை ஏத்திவுட்டா.." என்று முதல் சரணத்தில் முதல்வரியிலேயே சொல்லிவிடுகிறார்கள்.
கபாலி படத்தில் குமுதவள்ளி எப்படி கபாலியை "இவங்க தான் கோட்டு சூட்டு போடணும்னு யார் சொல்வது. நீ எப்போதும் கோட்டு சூட்டில் இருக்கணும்னு உருமாற்றுவாளோ அதையே தான் மஞ்சனத்தி செய்ததாக காட்டுகிறார்கள். என்ன அதை விசுவலாக காட்டாமல் பாடல்வரிகளில் கடந்து விடுகிறார்கள்.
பிறிதொரு காட்சியில், நாளை ஊரை சூறையாட போலீஸ் பட்டாளம் வரும் என்று தெரிந்து தயாராகும்போது கர்ணனுக்கு திரௌபதி "என்னானாலும் பாத்துக்கலாம். என்ன ஒரு 5,10 வருடம் உள்ளே இருந்துட்டு வருவியா. நான் காத்திருக்கேன்." என்பாள். அதேபோலத்தான் நடந்து இறுதியில் கரம் பிடிப்பாள்.
பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பெண்கள் குடும்பத்திற்குள் ஒடுக்கப்படுவதில்லை. சமூகத்தில் குடும்பமே ஒடுக்கப்படுவதால் இருக்கலாம். அல்லது ஆண் ஒடுக்கப்படுவதன் வலியை உணர்ந்ததால் பெண்ணை ஒடுக்க மனம் வருவதில்லை. அவர்கள் கல்வியில் மேன்மை அடைந்தாலும் ஆண்-பெண் சமத்துவத்தை இயல்பாக இருப்பதை பார்க்கிறேன். மேலும் ஆணின் உந்துசக்தியாக பெண் இருப்பதால் அவன் பெண்ணை மிகவும் நம்புகிறான்.
மாறாக ஆதிக்கசாதி பெண்களில், பார்ப்பன சிந்தனை கொண்ட சாதிய குடும்பங்களில் பெண்கள் எப்போதும் ஒடுக்கப்பட்டே வருகிறார்கள். அதற்கு சாஸ்திரம், சடங்குகளை துணைக்கு வைத்துக்கொள்கிறார்கள். அதிலும் பார்ப்பன குடும்பங்களில் பெண்ணை மனைவி, மகள், சகோதரி, மைத்துனி என்று தாயை தவிர்த்து அனைவரையும் "வாடி, போடி, ஏண்டி.." என்று பேச்சிலேயே பெண்ணின் மீது அடக்குமுறையை கையாள்வார்கள்.
இந்த படம் முழுக்கவே பெண்களின் உரிமைக்காகத்தான் மோதலே நடக்கும். பேருந்து நிலையத்தில் கல்லூரிக்கு விண்ணப்பிக்க தன் மகளை அழைத்து செல்லும் தந்தை அங்கு ஆதிக்கசாதி இளைஞர்களால் தன் மகளை தப்பாக பேசுவது பொறுக்காமல் அடிதடியில் இறங்குவார். தன் கர்ப்பவதி தாய் காத்திருக்கும்போது நிற்காமல் செல்லும் பேருந்தை கல்லால் அடிக்கும் சிறுவன். தன் சகோதரியை தவறாக பேசும்போது ஒரே ஊர்க்காரனாக இருந்தாலும் அடித்து துவம்சம் செய்யும் கர்ணன், தன் கடைக்குட்டி மகளை காப்பாற்றாமல் போய்விட்டோமே என குற்ற உணர்ச்சியில் மறுகும் கர்ணனின் தந்தை என்று பெண்களின் உரிமைக்கும், மதிப்பிற்கும், உயிருக்கும் குந்தகம் வராமல் காத்து நிற்கிறார்கள். இதுதான் வீரம்.
சாதிய மனிதர்களுக்கும், போலீஸ் அராஜகத்திற்கு எதிராக அடித் துவம்சம் செய்யும் நாயகன் கர்ணன், தன் அக்காவிடம், அம்மாவிடம், காதலியிடம் என்று தம் பெண்கள் எல்லோரிடமும் சகட்டுமேனிக்கு அடி வாங்குவான். பெண்ணிடம் வீரம் காட்டாத ஆண்மைதான் வீரம். பெண் ஓடிப் போய்விடுவாள் என்று சிறுவயதில் திருமணம் செய்துவைத்தலோ, கல்வி கொடுக்காமல் இருப்பதோ, விரதங்கள் என்று மத சடங்குகளில் தள்ளிவிடுவதோ, ஆணவக்கொலை செய்வதோ, பெண்களை பொதுநிகழ்வுகளில் பேசவிடாமல் அடக்குவதோ அல்ல வீரம்.