Nainar Nagendran: பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன்; அண்ணாமலை பெயர்ப்பலகை அழிப்பு? நடந்தது என்ன?
பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, ஏற்கெனவே தலைவராக இருந்த அண்ணாமலையின் பெயர்ப் பலகை கோடு போட்டு அழிக்கப்பட்டதா?

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றித் தேர்வான நிலையில், ஏற்கெனவே தலைவராக இருந்த அண்ணாமலையின் பெயர்ப் பலகையில், பெயர் அழிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதில் நடந்தது என்ன? பார்க்கலாம்.
தமிழக பாஜகவின் 13ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பலகட்ட இழுபறிகளுக்குப் பிறகு இந்த விவரம் வெளியாகி உள்ளது.
மூத்த தலைவர்களே பரிந்துரை செய்ய நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்று முடிந்த நிலையில், நயினார் நாகேந்திரனைத் தவிர யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. அதேபோல பாஜக மூத்த தலைவர்கள் எல்,முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பலர், பாஜக தலைவருக்கான பரிந்துரையை மேற்கொண்டனர்.
பெயர்ப் பலகை கோடு போட்டு அழிப்பா?
இந்த நிலையில், பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, ஏற்கெனவே தலைவராக இருந்த அண்ணாமலையின் பெயர்ப் பலகை கோடு போட்டு அழிக்கப்பட்டது.
இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில், அதில் உண்மையில்லை என்று பாஜக நிர்வாகி தெரிவித்துள்ளார்.

கோடுகளின் நிழல்தான் காரணம்
இதுதொடர்பாக மீண்டும் வெளியான வீடியோவில், ’’அண்ணாமலை பெயரை யாரும் அழிக்கவில்லை’’ எனவும் ’’அருகில் உள்ள மாநிலத் தலைவர்களின் பெயர் அடங்கிய பலகையின் உள்ள கோடுகளின் நிழல்தான் அவ்வாறு தெரிந்திருக்கிறது’’ எனவும் பாஜக விளக்கம் அளித்துள்ளது.






















