விடுதலை 2 ஓடிடியில் ரீ-ரிலீஸ்.. நீக்கப்பட்ட காட்சிகள் மீண்டும்.. எது தெரியுமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் மீண்டும் அமேசான் ஓடிடி தளத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை, விடுதலை 2 திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், புனைவுக்கதைகளோடு உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தினை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். முதல் பாகத்தில் வாத்தியாரை கைது செய்வதோடு முடிந்த நிலையில் முருகேசன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சூரி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து விடுதலை படத்தின் 2ஆம் பாகம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.
வாத்தியார் உருவான கதை
விடுதலை 2 -வில் வாத்தியார் உருவான கதையும் அதனையொட்டி நடக்கும் அரசியலை மிக தெளிவாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். விடுதலை முதல் பாகத்தில் கடைநிலைக் காவலர் குமரேசனால் கைது செய்யப்படும் தமிழர் மக்கள் படை தலைவர் பெருமாள் வாத்தியாரை மலைக்காட்டு வழியாக போலீஸ் பட வேறு இடத்திற்கு அழைத்து செல்கிறது. அப்படி போகும் வழியில் பெருமாள் வாத்தியார் தன் காதல் கதையையும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, தான் உருவெடுத்த கதையையும் சொல்கிறார். மற்றொரு பக்கம் அவர் கைதை வைத்து அதிகாரவர்க்கம் வேறுவிதமாக திட்டம் தீட்டுகிறது. அதே நேரத்தில் பெருமாள் வாத்தியாரை மீட்க அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸுடன் மோதுகின்றனர். இதில் பெருமாள் வாத்தியார் தப்பித்தாரா, இல்லையா என்பதுதான் கதையாக இருந்தது.
ஓடிடி-யில் ரீ ரிலீஸ்
பண்ணையார்களுக்கு அடிமைகளாக இருக்கும் கூலித்தொழிலாளர்களையும் அவர்கள் வீட்டு பெண்களையும் உடைமைகளாகக் காட்டியிருக்கும் காட்சியில் தொடங்கி தொடர்ந்து அதிகாரவர்க்கம் கூட்டணி போட்டு எளிய மக்களை அடிமைப்படுத்தும் காட்சிகளையும் இயக்குநர் வெற்றிமாறன் தெளிவாக காட்டியிருந்தார். இதற்கு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இந்நிலையில், விடுதலை, விடுதலை 2 அமேசான் பிரைமில் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. விடுதலை 2 வெளியான நேரத்தில் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைமாக இருந்தது.
காட்சிகள் சேர்ப்பு
இப்படத்தில் நீக்கப்பட்ட சில காட்சிகள் மீண்டும் சேர்க்கப்பட்டு தற்போது 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படமாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. விடுதலை 2 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் குமரேசன் தனது அம்மாவிற்கு கடிதம் எழுதிவிட்டு மலைக்காட்டில் நடந்து செல்வதோடு படம் முடிந்திருக்கும். தற்போது எந்த காட்சிகள் சேர்க்கப்பட்டடுள்ளது. பெருமாள் வாத்தியார் இறப்பிற்கு பின் பெண்களின் நிலை என்ற கேள்வியும் இருந்தது. இதுகுறித்த காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற ஆர்வம் சினிமா ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. கத்தரிப்பு செய்யப்பட்ட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் விடுதலை 2 படத்தை மீண்டும் பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது.





















