சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆமிர் கான்...கைவிட்டு போன செம பட வாய்ப்பு
ஆமீர் கான் நடித்துள்ள ' சிதாரே ஜமீன் பர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஆமிர் கான் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். ஆமீர் கான் தயாரித்து நடித்துள்ள சிதாரே ஜமீன் பர் திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதலில் தான் நடிக்க விரும்பவில்லை அதனால் இந்தியில் ஃபர்ஹன் அக்தர் மற்றும் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயனை நடிக்க முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
சிதாரே ஜமீன் பர்
தொடர்ச்சியாக வெவ்வேறு கதைகளின் மூலம் சமூகத்தில் உள்ளோடி இருக்கும் பிரச்சனைகளை அடையாளம் காட்டி வருகிறார் ஆமிர் கான். கடந்த ஆண்டு இவர் தயாரிப்பில் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம் இந்தியாவின் கிராமப் புறங்களில் பெண்கள் மீதான கட்டுபபாடுகளை பகடி செய்தது. 2007 ஆம் ஆண்டில், ஆமிர் நடித்து இயக்கி வெளியான தாரே ஜமீன் பர் படம் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளைப் பற்றி ஒரு முக்கியமான உரையாடலாக இருந்தது. இதே படத்தின் சாயலில் மற்றொரு கதையில் உருவாகி இருக்கும் படம் சிதாரே ஜமீன் பர்
திவி நிதி ஷர்மா எழுதி பிரசன்னா ஆர்.எஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக், அரூஷ் தத்தா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமன் மிஸ்ரா, ரிஷி ஷஹானி, ரிஷப் ஜெயின், ஆஷிஷ் பென்ட்சே, சம்வித் தேசாய், சிம்ரன் மங்கேஷ்கர், ஆயுஷ் பன்சாலி, டோலி அலுவாலியா, குர்பால் சிங், பிரிஜேந்திர கலா, பிரிஜேந்திர கலா இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஊதாரியான நாயகன் அறிவுசார் குறைபாடுள்ள ஒரு குழுவிற்கு பாஸ்கெட் பால் பயிற்சி அளிப்பதே படத்தின் கதை . இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாக ஆமிர் கான் தெரிவித்துள்ளார்
சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட ஆமிர் கான்
கொரோனா நோய்த் தொற்று பரவலின்போது ஆமீர் கான் நடிக்க இருந்த படம் ஒன்று நின்றுபோனது. இதனால் 2 வருடங்களுக்கு எந்த படத்திலும் நடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்தார். அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குழந்தைகள் சொன்னதால் லால் சிங் சட்டா படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால் இந்த படம் பெரியளவில் தோல்வியை சந்தித்ததும் மன உளைச்சலுக்கு ஆளான ஆமீர் கான் இனி நடிக்கப் போவதில்லை என முடிவு செய்தார். அப்போது அவரிடம் சிதாரே ஜமீன் பர் கதை வந்ததும் அதில் தான் நடிக்கமாட்டேன் என்று சொல்லி படத்தை தயாரிக்க சம்மதித்தார். இந்தியில் ஃபர்கான் அக்தர் மற்றும் தமிழில் சிவகார்த்திகேயனை தேர்வு செய்தார்கள். சிவகார்த்திகேயனுக்கு கதை பிடித்துப் போய் அவரும் நடிக்க சம்மதித்து விட்டார்.
படப்பிடிப்பு தொடங்க இருந்த சில நாட்களுக்கு முன் கதையை முழுவதுமாக படித்த ஆமிர் கான் தானே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். உடனே சிவகார்த்திகேயனிடம் இதை சொல்லி அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். "சிவகார்த்திகேயன் ஏமாற்றமடைந்தாலும் நிலைமையை புரிந்துகொண்டார்" என ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.





















