AIADMK BJP Alliance: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி! அண்ணாமலை பதவி பறிக்கப்பட்ட உடனே அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதை அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவித்தனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாவே பரபரப்பான சூழலில் தமிழக அரசியல் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த ஓரிரு நாட்களாகவே அதிகளவு பரபப்பு காணப்படுகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அமித்ஷாவின் சென்னை வருகையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாக உள்ள நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால் அவர் தலைவராவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உறுதியான அதிமுக - பாஜக கூட்டணி:
இந்த நிலையில், அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு புதிய தலைவர் தேர்வாகியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா ஆகியோர் இணைந்து நிருபர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தமிழக பா.ஜ.க. கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்து போட்டியிடுகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பா.ஜ.க., அதிமுக கூட்டணி உறுதியாகியிருப்பதால் தமிழக அரசியல் புதிய பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
தனித்து விடப்பட்ட பா.ஜ.க.:
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட தலைமை மோதல் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் ஒருங்கிணைவதில் பா.ஜ.க. முக்கிய பங்கு வகித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தது.
தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை அ.தி.மு.க.வின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்தது அதிமுக-வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்பதால் மீண்டும் கூட்டணிக்குச் செல்ல வேண்டிய அவசியம் உண்டாகியுள்ளது. திமுக-விற்கு எதிராக இருப்பதால் அவர்களின் முதன்மை தேர்வாக அதிமுக-வே இருந்தது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய அரசியல் முகமாக களமிறங்கியுள்ள விஜய்யின் தவெக-வின் கொள்கை எதிரியாக பா.ஜ.க.வும் இருப்பதால் விஜய்யுடன் தமிழக பா.ஜ.க.வால் கூட்டணி கோர்க்க முடியாத சூழல் உள்ளது.
நயினார் நாகேந்திரன்:
தமிழ்நாட்டில் அதிமுக - பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டிருப்பது அதிமுக-வின் அடிப்படைத் தொண்டர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. அதேசமயம், தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணி கட்சியினருடன் இணக்கமான போக்கை கையாளும் நபர் என்பதாலும், அதிமுக சார்பில் அமைச்சர் பதவியை வகித்தவர் என்பதாலும் கடந்த கால கசப்பான அனுபவங்களை மாற்ற இயலும் என்று இரண்டு கட்சியினரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
எதிர்வரும் கால அரசியல் நடவடிக்கைகளின் அடிப்படையில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் எப்படி வரவேற்பு அளிக்கின்றனர் என்பது தீர்மானிக்க முடியும்.





















