News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Kolapasi Series 17 | சீரக சம்பா பிரியாணி திண்டுக்கல்லுக்கு வந்த கதை - வாய்க்கு போடாதீங்க பூட்டு

திப்பு சுல்தானின் அரண்மனையில் இருந்தே பிரியாணி மெல்ல மெல்ல திண்டுக்கல் நகருக்குள் எட்டிப்பார்த்துள்ளது. அரண்மனை சமையல் பணியாளர்கள் தான் இந்த உணவை இந்த நிலத்திற்கு ஏற்ப இன்னும் நுட்பமாக மாற்றுகிறார்கள்

FOLLOW US: 
Share:

பாண்டியர்கள், சோழர்கள்,  பல்லவர்கள் என திண்டுக்கல் நகரம் பல ஆட்சி ஆளுகைகளின் கீழ் இருந்துள்ள வரலாற்று நகரம் திண்டுக்கல். 14-ஆம் நூற்றாண்டில்  சுல்தானியர்கள் வசமானது அதன் பின்னர் விஜய நகர பேரரசாலும்  மதுரை நாயக்கர்களாலும் ஆளப்பட்டது.  1605-ல் திண்டுக்கல் மலைமீது கோட்டை கட்டப்பட்டது.  இராணி மங்கம்மாளும் சில காலம் திண்டுக்கலுக்கு அரசியாகத் திகழ்ந்தார். திண்டுக்கல் மலைக்கோட்டை, பாளையக்காரர்களுக்கு முக்கிய தலமாக விளங்கியது. திப்பு சுல்தான் ஆங்கிலப் பேரரசுக்கு எதிராக பிரஞ்சுப் படைகளுடன் சேர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் போரில் ஈடுபட்டார். இந்தப் போரில் திப்பு சுல்தானுக்கு ஆதரவாக, விருப்பாச்சி பாளையக்காரரும், திண்டுக்கல் பாளையத்தின் கோபால் நாயக்கரும், சிவகங்கை சீமையிலிருந்து அரசி வேலு நாச்சியாரின் தளபதிகளான மருதுபாண்டியர்களும், ஹைதர் அலியின் அனுமதி பெற்று இந்த மலைக்கோட்டையில்தான் தங்கியிருந்தனர்.


திண்டுக்கல் நகரத்தில் அதிகாலையில் நாம் நம் உணவு வேட்டையை NVGB தியேட்டர் ரோட்டில் உள்ள ஜெயஸ்ரீ உணவகத்தில் இருந்து தான் தொடங்கியாக  வேண்டும். செளராஷ்டிரா மக்கள் நடத்தும் இந்த உணவகம் பொங்கல், பூரி, இட்லி, ரவா தோசை என மிகவும் ருசியான படையலுடன் காத்திருக்கும். சிவா மெஸ் சவுராஸ்டிரா உணவுகளின் மற்றும் ஒரு முக்கிய இலக்கு. அதே போல் மஹாகணபதி வெஜ் ரெஸ்டாரன்டும் சைவ உணவுக்கு பெயர் பெற்ற நிறுவனம்.  இது திண்டுக்கல் ஆச்சே காலையிலேயே தடபுடலான அசைவ உணவுகள் எங்கே என்கிற உங்கள் குரல் என் காதுகளை எட்டாமல் இல்லை.  பேகம்பூரில் பெருமாள் நாயக்கர் கடையில் அதிகாலையிலேயே இட்லி, மட்டன் சாப்ஸ், பிரியாணி என சகலமும் கிடைக்கும் ஆனால் இங்கே சாப்பிடுவதற்கு நீங்கள் இரவு சீக்கிரம் உறங்க வேண்டும். இந்தக் கடையை அதிகாலை தொடங்கி காலை 7.30 மணிக்கு மூடிவிடுவார்கள், எல்லா ஐட்டமும் தீர்ந்துவிடுமாம், இப்ப யோசியுங்கள் இரவு சீக்கிரம் தூங்குவது அல்லது  இரவெல்லாம்  முழித்துக்கொண்டேயிருப்பது எது பெஸ்ட் சாய்ஸ் என்று. அதே போல் பெரிய கடை வீதியில் பங்காரு நாயுடு கடையில் பிரியாணி, மூளை, நெஞ்சு சாப்ஸ், ஈரல் என சகலமும் காலையிலேயே கிடைக்கும். காலையிலேயே சைவமோ அசைவமோ ஒரு கட்டு கட்டிவிட்டீர்கள் என்றால் மெல்ல மலைக்கோட்டைக்கு ஒரு முறை சென்று வாருங்கள், உங்கள் வயிறு திண்டுக்கல் நகரத்தின் உபசரிப்பை தாங்கத் தயாராகிவிடும்.


திப்பு சுல்தானின் அரண்மனையில் இருந்து தான் பிரியாணி மெல்ல மெல்ல திண்டுக்கல் நகரத்திற்குள் எட்டிப்பார்த்துள்ளது. அரண்மனையின் சமையல் பணியாளர்கள் தான் இந்த உணவை இந்த நிலத்திற்கு ஏற்ப இன்னும் நுட்பமாக மாற்றுகிறார்கள்.  திண்டுக்கல் பிரியாணி என்றாலே அது  சீரக சம்பா பிரியாணி தான், ஆம்பூர் பிரியாணிக்கு ஆதார் கிடைப்பதில் பெரும் சவால் விடும் பிரியாணியாக எப்பொழுதும் சீரக சம்பா பிரியாணி களத்தில் உறுதியுடன் நிற்கிறது. உருதுவா தமிழா என்பது போல பாஸ்மதியா சீரக சம்பாவா எது சிறந்தது என்பதில் 300 ஆண்டுகளாக பட்டிமன்றம் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

அரண்மனையின் சமையல் பணியாளர்களில் ஒருவர் தொடங்கியது தான் தலப்பாக்கட்டி பிரியாணி என்கிறது செவி வழி வரலாறு. திண்டுக்கலில் நாம் ஒரு நான்கு நாட்கள் தங்கினால் தான் இந்த விரிவான பந்திகளில் சாப்பிட்டு முடிக்க முடியும். தலப்பாக்கட்டியில் மட்டன் பிரியாணி, மூளை ரோஸ்ட் அற்புதமாக இருக்கும். பொன்ராமில் மட்டன் பிரியாணியுடன் முட்டை கறி தான் என் காம்பினேசன், சிவாவில் மட்டன் பிரியாணியுடன் நெஞ்சுக்கறி சாப்ஸுக்கு ஈடேயில்லை, வேணு பிரியாணியில் மட்டன் பிரியாணியுடன் சுக்கா தான் பெஸ்ட் சாய்ஸ். ஹாதியா பிரியாணியில் சிக்கன் பிரியாணி நன்றாக இருக்கும், முஜிப் பிரியாணியில் மட்டன் பிரியாணியுடன் உப்புக்கறி தான் திவ்யமான சைட் டிஷ்,  கே.எம். பிரியாணியில் வான்கோழி பிரியாணியுடன் வான்கோழி சாப்ஸ், வான்கோழி சுக்கா என அது வான்கோழிகளின் சரணாலயமாகவே காட்சியளிக்கும்.

மதியம் பேகம்பூரில் பீஃப் பிரியாணி வித விதமான செய்முறைகளில் கிடைக்கும்.   அதேபோல்  மதியத்தில் ஜபார் ஹோட்டல், தாஜ் ஹோட்டலில் பரோட்டா போடத் தொடங்குவார்கள், மதியம் தொடங்கும் இந்த பரோட்டா வேள்வி இரவு வரை தொடரும். எப்பொழுது சென்றாலும் இங்கு சுடச்சுட பரோட்டா மற்றும் அதன் அனைத்து பக்கவாத்தியங்களுடன் ஒரு சேர்ந்திசையை நிகழ்த்தலாம். திண்டுக்கலில் இந்த பிரியாணிகளை உள்ளே தள்ளியவுடன் கொஞ்சம் கண்கள் சொருகும், அந்த நேரம் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், சரியாகத் தேடினால் அற்புதமான சர்பத்கள்  கண்களுக்கு தென்படும், நல்லா ஐஸ் போட்ட சர்பத்துக்களை பருகினால் படிகளில் ஏறாமலேயே மலைக் கோட்டைமீது மிதப்பது போல் இருக்கும். திண்டுக்கலில் நல்ல ருசியான நன்னாரி சர்பத் வெறும் ஐந்து ரூபாய் முதல் கிடைக்கிறது. ஐந்து ரூபாய்க்கே இத்தனை ருசியான சர்பத்தா என்று நீங்கள் வியக்கும் அளவிற்கு அருமையாக இருக்கும். சிறுமலையில்  கிடைக்கும் அருமையான நன்னாரி வேர்கள் தான் இந்த ருசிக்குக் காரணம், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கே சர்பத் தயாரித்து தமிழகம் எங்கும் அனுப்புகிறார்கள்.


பேகம்பூர் பகுதியில் கிடைக்கும் நோன்புக் கஞ்சி பிரமாதமாக இருக்கும். ரம்ஜான் நேரம் நோன்புக் கஞ்சியுடன் பருப்பு வடை, கடல் பாசி, சப்ஜா விதை சர்பத், சிக்கன் கஞ்சி, சட்னியுடன் உளுந்த வடை என ஒரே அமர்க்களமாக இருக்கும். மாலையில் ஜாபர் டீ கடையில் பாய்லர் தேநீர் மற்றும் ஒரு பொட்டணம்  பக்கோடாவை மறவாமல் ருசிபார்த்து விடுங்கள். பின்மதியம் கொஞ்சம் அசந்து தெரியும் திண்டுக்கல் நகரத்திற்கு இரவில் மீண்டும் உயிர் வந்துவிடும். ஆச்சிஸ் கடையில் நிஜாம் சிக்கன், முஜிப் பிரியாணியில் வாழை இலை பரோட்டாவும் இடிச்ச கறியையும் அவசியம் ருசித்துப் பாருங்கள். பழனி ரோடு கோழி நாடார் கடையில் செட் பரோட்டாவும் நாட்டுக்கோழியும் அவசியம் தரிசனம் செய்யுங்கள். பேகம்பூர் செல்வம் கடையில் செட் பரோட்டாவும் முட்டை தோசையும் ஆர்டர் செய்து விட்டு காத்திருங்கள்.


முகமதியர்புரத்தில் ஜிகர்தண்டா, பீரணி, பிரட் ஸ்வீட், பீட்ரூட் அல்வா மதியம் முதல் இரவு வரை  கிடைக்கும். பழனி ரோட்டில் சக்தி தியேட்டர் அருகில் உள்ள ஏ.பி. பிரியாணி பீஃப் பிரியாணிக்கு பேமஸ் இந்த கடையின் பிரியாணிக்கு தனித்த ருசியும் ரசிகர்களும் உண்டு. திண்டுக்கல் டவுனில் மாரியம்மன் கோவில் திருவிழா, மேட்டுப்பட்டி பாஸ்கா திருவிழா, ரம்ஜான், பக்ரீத், கந்தூரி விழாக்கள், கூளிப்பட்டி தர்கா கந்தூரி விழா என் இந்தப் பகுதியில் நடக்கும் விழாக்களின் போது உணவுகளும் இடைத்தீனிக்கடைகளும் களைகட்டும், இன்னும் விதவிதமான உணவுப் பண்டங்கள் கிடைக்கும். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள கோபால்பட்டி தெளபிக் பிரியாணி நீங்கள் அவசியம் செல்ல வேண்டிய ஒரு முக்கியக் கடை. வத்தலகுண்டு சாலைப் புதூரில் மண் பானைச் சமையல் அசைவ சாப்பாட்டில் ஒரு வீட்டு விருந்தாகவே மக்களை ஈர்த்து வருகிறது.


கொடைக்கானல் சென்றவுடன் நான் செய்யும் முதல் வேலை தி பேஸ்ட்ரி ஷாப்-க்கு சென்று ஒரு சுடச்சுட பீட்சா துண்டை வணங்கி விட்டு ஒரு ஃபில்டர் காபியை கொதிக்கக் கொதிக்க பருகுவது தான். ஏரியைச் சுற்றிவிட்டு மதிய உணவிற்கு காமராஜ் மெஸ், இரவு உணவுக்கு  தி ராயல் டிபெட் ரெஸ்டாரண்ட். திண்டுக்கல் உணவிலும் வேளாண் உற்பத்தியிலுமே மிகவும் துடிப்பான ஒரு மாவட்டம். செம்பட்டியில் திராட்சை, கொடை ரோட்டில் திராட்சை, நிலக்கோட்டையில் மல்லிகைப்பூ, கொடைக்கானல் முழுவதும் தேன், மிளகு, தேயிலை, காபி, செளசெள, பீன்ஸ், காரட், காளிபிளவர், முட்டை கோஸ், பியர், பேரிக்காய் என தமிழகம் எங்கும் அனுப்பி வருகிறது. கொடைக்கானல் ஒரு வேளாண் உலகம் என்றால் மற்றுமொரு உலகமாக சிறுமலை விளங்குகிறது. சிறுமலையில் இருந்து தேன், மலை வாழை, காபி, காட்டுக் கிழங்குகள், மிளகு என பல்வேறு பொருட்கள் விளைந்து இந்த மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேளாண் உற்பத்தி,  உணவு என்று இரு துறைகளிலும் சிறப்புகளுடன் திகழ்கிறது.

Published at : 25 Feb 2022 12:03 PM (IST) Tags: dindigul Tipu Sultan Non Vegetarian Kolapasi A.Muthukrishnan Dindigul Thalappakatti Biryani Siraga Samba Biryani Basmati Rice Biryani

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?