kolapasi Series 12 | ஆமைக்கறியின் அமைவிடம்; பரோட்டாவின் பிறப்பிடம் - தூள் கிளப்பும் தூத்துக்குடி உணவு பயணம்
’’40 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆமைகள் தூத்துக்குடியில் இருந்து ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும், ஆமைகளை ரயிலில் புரட்டிப் போட்டு அதன் வயிற்றிலேயே சென்னை கம்பெனியின் பெயரையும் எழுதிவிடுவார்கள்’’
தூத்துக்குடி என்றாலே என் மனதில் என்ன என்ன வார்த்தைகள் உதிக்கிறது என்று ஒரு பட்டியல் போட்டேன். சங்க காலம், கொற்கை, முத்து, உப்பு, மீன், துறைமுகம், மணப்பாடு தேவாலயம், கட்டபொம்மன் கோட்டை, பாரதியாரின் வீடு, உமறுப்புலவர், கால்டுவெல், போர்த்துக்கீசியர்கள், ஒல்லாந்தர்கள் என அந்தப் பட்டியல் மக்ரூனில் வந்து முடிந்தது. சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களில் முதன்மையானதாக கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 7 முதல் 9ம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர்களின் ஆட்சி நடைபெற்ற காலத்தில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. பாண்டியர்களின் முதல் தலைநகரமும் கொற்கை தான். கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது, கொற்கை முத்துக்கள் பற்றிய பேச்சுக்கள் ரோமாபுரி இலக்கியங்கள் வரை எட்டியது. கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையை கொல்கி என்று குறிப்பிட்டுள்ளார்.
கொலபசியின் முந்தைய தொடர்களை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kolapasi Series 11| பதநீர் ஊற்றி செய்யப்படும் சர்க்கரை பொங்கல்.. நாவை சப்பு கொட்ட வைக்கும் நாஞ்சில் நாட்டு பயணம்
இந்நகரம் கி.பி. 9-ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னனின் அரசாட்சியின் கீழ் இருந்தது. தூத்துக்குடி வித விதமான ஆட்சிகளைப் பார்த்தது. போர்த்துக்கீசியர்கள், அரேபியர்கள், ஒல்லாந்தர்கள், பிரெஞ்சு நாட்டவர், ஆங்கிலேயர்கள் எனப் புதிய புதிய தலைமைகளின் கீழ் வண்ணமயமான கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்த இடம் தூத்துக்குடி. தூத்துக்குடியில் சமையற்கட்டை குசினி என்பார்கள், குசினி ஒரு போர்த்துக்கீசியச் சொல். அலமாரி, ஜன்னல், மேசை, மேஸ்திரி, சாவி, வராந்தா, பீப்பாய், அன்னாசி என்று இன்று தமிழ் மொழியாகவே மாறிவிட்ட இந்த வார்த்தைகள் அனைத்தும் போர்த்துக்கீசிய மொழியின் வார்த்தைகளே. இந்தப் போர்த்துக்கீசிய வார்த்தைகள் தமிழ் மொழிக்குள் தூத்துக்குடி வழியாகவே நுழைந்தன. சரி வார்த்தைகளில் இருந்து வெளியேறி உணவுக்குள் குதிப்போம்.
கொலபசியின் முந்தைய தொடர்களை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-Kolapasi Series 10 | உணவு பிரியர்களின் சங்கமம் சேலம் - ராக்கெட் ரோஸ்ட் முதல் அணுகுண்டு சாப்ஸ் வரை...!
தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்திற்கு பல உணவுகளை வழங்கி உள்ளது. திருச்செந்தூரிலிருந்து வரும் சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு, உடன்குடி கருப்பட்டி, கூப்பதினி, நொங்கு இந்த உலகில் கிடைக்கும் மிக ஆரோக்கியமான உணவுகள் என்றால் மிகையில்லை. அதே போலவே பனங்கிழங்கு, பனங்கிழங்கை அனைவரும் அவித்துச் சாப்பிடுவோம் ஆனால் அதைச் சுட்டு சாப்பிடும் பக்குவம் இந்தப் பகுதி மக்கள் கைவசம் உண்டு. வேம்பாரில் ஒரு முறை சாப்பிட்டேன் சுட்ட பனங்கிழங்கிற்கு ஈடுயிணையில்லை. போர்த்துசீயர்கள் தங்களுக்காக செய்யத் தொடங்கிய ரொட்டிக்கு மாவு உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டிலிருந்து வரவழைத்தனர், ரொட்டி நம்மவர்களுக்கு ஒத்துவரவில்லை என்பதால் அதே மாவை நம்மவர்கள் பிசைந்து சுட்டதில் தான் நம்ம பரோட்டா பிறந்தது. தூத்துக்குடி ஏன் பரோட்டாவின் தலைநகரமாகக் கருதப்படுகிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவு சந்தைக்கு வந்தது. விலை மலிவாக இருந்த மைதாவில் செய்யப்பட்ட பரோட்டாக்கள் எளிய மக்களின் உணவாக மாறியது. சாதா பரோட்டா தவிர்த்து இந்த ஊரில் இருந்து தான் எண்ணெயில் பொறித்த பரோட்டா என்கிற புதிய ரகம் கிளம்பியது.
நான் முதல் முதலில் தூத்துக்குடிக்குச் சென்ற போது அங்கே ஏராளமான நைட் க்ளப்புகளைப் பார்த்தேன், ஒரு ஊரில் இத்தனை நைட் க்ளப்புகளா என்று கொஞ்சம் குழம்பியும் போனேன். பின்னர் தான் அவை எல்லாம் மாலை நேரங்களில் இயங்கும் பரோட்டா கடைகள் என்பது விளங்கியது. ஆல்வார் நைட் க்ளப், 40 ஆண்டுகளாக எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஜாஸ்மின் நைட் க்ளப், பழைய மார்கெட் அருகில் இருக்கும் பேமஸ் நைட் க்ளப், பாளைங்கோட்டை சாலையில் உள்ள சரவணா தி நைட் க்ளப், ஜின் பேக்டரி ரோட்டில் உள்ள குமார் நைட் க்ளப் என இந்த ஊரில் சுற்றினால் நைட் க்ளப் சகல திசைகளிலும் அணிவகுத்து நிற்கும். ராஜாமணி நைட் க்ளப், அய்யனார் நைட் க்ளப், சேகர் நைட் க்ளப், ரஹ்மத் நைட் க்ளப், புகாரி நைட் க்ளப் என தூத்துக்குடியின் நைட் க்ளபுகளில் மாலை நேரம் முழுவதும் கடல் அலை போல் மக்கள் அலை அலையாய் வந்து செல்வார்கள், வார விடுமுறைகள் எனில் இன்னும் கொண்டாட்டம் தான். பொறித்த பரோட்டா, நாட்டுக்கோழி, தலைக்கறி, சாதா பரோட்டா, மட்டன் சாப்ஸ், காடை, கவுதாரி என ஒரு கட்டு கட்டிவிட்டு ஃபினிசிங் டச்சாக ஒரு ஆஃப் பாயிலை உள்ளே தள்ளிவிட்டு அப்படியே கடல் காற்று வாங்கச் செல்லுங்கள்.
பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஹோட்டல் ராஜபார்வை இந்த ஊரின் அடையாளங்களில் ஒன்று. ஹவுசிங் போர்ட் அருகில் உள்ள ராயல் ரெஸ்டாரண்ட், மதிய சாப்பாட்டிற்கு மீனாட்சிபுரம் சாலையில் உள்ள பிரேமா மெஸ் என தரமான மீன் சாப்பாடுகள் கிடைக்கும். முத்து பேமிலி ரெஸ்டாரண்ட், கோகோ பேமிலி ரெஸ்டாரண்ட், ஹோட்டல் சான்ச்சி மற்றும் பெல் ஹார்பர் ரெஸ்டாரண்ட் இந்த ஊரின் தரமான உணவகங்கள். ஹோட்டல் அசோக் பவன், ஹோட்டல் சன்முகா பவன், பாலாஜி வெஜ் ரெண்டாரண்ட், பூக்கணி வெஜ் ரெஸ்டாரண்ட், ஸ்ரீ பவன்ஸ், ஹோட்டல் பிருந்தாவன் என சைவ உணவகங்களும் இங்கே ஏராளமாக உள்ளன. தூத்துக்குடி பலவித சர்பத்களுக்குப் பெயர் பெற்றது. பழரச சர்பத் என்று தூத்துக்குடியில் அழைப்பார்கள். இதையே மதுரையில் மிக்சட் புருட் ஜீஸ் என்று நாங்கள் அழைப்போம். பால்ராஜ் கடையின் பழரச சர்பத், இங்கே மிகவும் பேமஸ். நான் தூத்துக்குடியில் அருந்திய நொங்கு லெமன் சர்பத்தின் ருசி இன்னும் நினைவில் தங்கியிருக்கிறது.
இவை தவிர நீங்கள் மீனவக் கிராமங்களுக்குச் சென்றால் இந்த நிலத்தின் உணவுகள் விதவிதமாக கிடைக்கும். அவர்கள் சாப்பிடும் மீன்கள் அவைகளின் செய்முறைகள் தூத்துக்குடி உணவங்களில் கிடைப்பது அரிது. அசனச்சோறு, ஆமைக்கறி என கடலோர கிராமங்களின் உணவுகளைத் தனியே ஒரு நூலாகவே தொகுக்கலாம். 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆமைகள் தூத்துக்குடியில் இருந்து ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும், ஆமைகளை ரயிலில் புரட்டிப் போட்டு விடுவார்கள், அதனால் அசைய இயலாது, ஆமையின் வயிற்றிலேயே சென்னை கம்பெனியின் பெயரையும் எழுதிவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போல் இங்கே ஒரு காலத்தில் கடல் பசு கிடைக்கும், அதனை டுஜோங்க் ( Dugong) என்று அழைப்பார்கள், அசப்பில் அதன் ருசி பன்றி இறைச்சி போலவே இருக்கும், தடை செய்யப்பட்டு விட்டதால் 1960களில் பிறந்தவர்கள் இந்தக் கடல் உணவுகளை ருசித்திருக்க வாய்ப்பிருக்கிறது.
கொலபசியின் முந்தைய தொடர்களை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kola Pasi Series-5 | தஞ்சை தரணியின் சாப்பாடும்...! சாம்பாரின் கதையும்...!
தூத்துக்குடி என்றாலே கருவாடுகளின் சுகந்தம் மூக்கை துளைக்கும் தானே. நெத்திலிக் கருவாடு, கூனி இறால், பாறைக் கருவாடு, மாசிக் கருவாடு, சீலா நெய் மீன் கருவாடு, அயலைக் கருவாடு, திருக்கைக் கருவாடு, சாளைக் கருவாடு, பால் சுறா கருவாடு, பெரிய ஊழிக் கருவாடு, வாளைக் கருவாடு, கொடுவா கருவாடு என வித விதமாகக் கிடைக்கும். கருவாடுகள் மட்டும் இல்லை இதில் செய்த தொக்குகளும் கிடைக்கும், சுடு சோற்றில் கருவாடு தொக்கு என்றால் அப்படியே கடலில் மிதப்பது போல் ஒரு ஆனந்தம் தான்.
தூத்துக்குடியில் பர்மிய உணவுகள் வழமையாகக் கிடைக்கும். அத்தோ, பேஜோ, மொய்ங்கா, முட்டை மசால் என்பவற்றை நாம் சாப்பிட்டிருப்போம். தமிழகம் முழுவதும் பர்மா இடியாப்பக் கடைகளில் பஞ்சு போன்ற இடியாப்பத்தை ருசிக்காதவர்கள் இருக்க முடியாது. தேங்காய் பால் உப்புமா இதுவும் ஒரு பர்மிய உணவு, அவசியம் ருசிக்க வேண்டிய ஒரு உணவு. தூத்துக்குடியில் ஒரு காலத்தில் கிடைத்த உணவுகள் இப்பொழுது வீடுகளில் மட்டுமே செய்யப்படுகிறது. இந்த உணவுகளின் செய்முறைகள் இணையத்தில் உலவுகிறது, செய்தே பார்த்துவிடுங்களேன். இந்தப் பகுதியில் மட்டுமே கிடைக்கும் விவிகா நீங்கள் ருசிக்க வேண்டிய ஒரு பண்டம். பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம், வெல்லம், முந்திரி, தேங்காய், சுக்கு, ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் ஒரு இனிப்பு இட்லி இது. பதநீர் ஊற்றி செய்யப்படும் விவிகா ருசியோ ருசி, தொன்மையுடன் உள்ள விவிகாவை நீங்கள் தேடிப் பார்த்து ருசித்து மகிழலாம்.
உணவுப் பிரியர்கள் தூத்துக்குடி சென்றால் காயல் பட்டிணம் ஒரு எட்டு போய்விட்டு வாங்க. இலங்கைக்குச் சென்ற உணர்வுடன் திரும்புவீர்கள், நிலம் மட்டும் அல்ல உணவும் தான். காயல் பட்டிணம் அப்பம் அவ்வளவு ருசி, அதே போல் கோழி அப்பமும் தனித்த ருசி. அங்கே கிடைக்கும் அகணி பிரியாணி தனித்துவமானது. இது உலர் பழங்கள், இறைச்சி போட்டு செய்யப்படுகிற ஒரு வெள்ளை பிரியாணி. காயல்பட்டியத்தில் இடியாப்ப பிரியாணியும் அற்புதமான பக்குவத்தில் செய்யப்படுகிறது. அகணிக் கறி இந்த ஊரின் தனித்துவமான வெள்ளை மட்டன் க்ரேவி. இவை தவிர்த்து ரொட்டி தகடி, அரிசி மாவு ரொட்டி, புக்க சோறு, இறைச்சியில் செய்யப்படுகிற தேங்காய் பால் கறி அடை, மாட்டிறைச்சியை முட்டையில் முக்கிப் பொறிக்கும் சாப்ஸ் கறி என ஒரு வாரம் தங்கினால் தான் காயல்பட்டிணம் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
இந்த கிராமங்களில் சளி இருமல் என்றால் உடன் கார சாரமான நண்டு தொக்கு வீடுகளில் வைத்திருப்பார்கள், அல்லது உடன் நண்டு வாங்கு சாறு வைத்து கொடுத்தால் சளி இருமல் சாப்டர் க்ளோஸ். இந்த கிராமங்களில் நண்டு என்றால் அது உயிர் நண்டு தான், நகரங்கள் போல் ஐஸ் நண்டுகள் என்றே பேச்சுக்கே இடமில்லை. கப்பல் பயணத்திற்குச் செல்பவர்கள், மீன் பிடிக்குச் செல்பவர்கள் கூட பயணத்தில் வாந்திபேதி வராமல் இருக்க ஒரு ரசம் வைத்து உடன் எடுத்துச் செல்வார்கள், அதன் பெயர் கப்பல் ரசம். வாய்ப்பு கிடைத்தால் கப்பல் ரசம் ஒரு முறை குடித்துப்பாருங்கள். பெயர் தான் கப்பல் இதில் கப்பல் எல்லாம் சேர்க்க மாட்டார்கள், இது சைவ உணவு தான் அதனால் சைவர்களும் தைரியமாகக் குடித்துப் பார்க்கலாம். தூத்துக்குடியின் உணவுகளை முழுவதுமாக ருசிக்க வேண்டும் என்றால் பனிமாதா திருவிழா நேரம் தூத்துக்குடி சென்றால் நகரம் முழு வீச்சில் இருக்கும், அத்துடன் உணவுகளும் வித விதமாகக் கிடைக்கும். ஞானம் பேக்கரி மக்ரூனும் சாந்தி பேக்கரியின் சூடான தேங்காய் பன்னும் வாங்காமல் ஊருக்கு கிளம்பிடாதீங்க மக்கா.
கொலபசியின் முந்தைய தொடர்களை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kola Pasi Series-1 | தமிழக உணவுலகில் ஒரு உலா