காத்திருந்த அமைச்சர்கள், நிர்வாகிகள்; அரசுப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் வாழ்த்துப்பெற்ற முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின் லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், எல்.கே.ஜி. யு.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.

அமைச்சர்களும், இலட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் வாழ்த்துகள் தெரிவிக்க காத்துக்கொண்டிருக்கையில், நேராக அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்த முதலமைச்சர் தனது பிறந்தநாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 72ஆம் பிறந்த நாள் இன்று (மார்ச் 1) கொண்டாடப்படுகிறது. முதல்வர் தனது பிறந்தநாளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்து சிறப்பித்தார்.
பிறந்த நாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கிய முதல்வர்
இதுகுறித்துப் பதிவிட்ட துணை முதல்வர் உதயநிதி, ’’அமைச்சர் பெருமக்களும், இலட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் வாழ்த்துகள் தெரிவிக்கக் காத்துக்கொண்டிருக்கையில், நேராக அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்த முதலமைச்சர் தனது பிறந்த நாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார்’’ என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கை ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
மாணவ சேர்க்கை ஆணை
தமிழ்நாடு முழுவதும் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.3.2025) பாரம்பரியம் மிக்க நூற்றாண்டுகளைக் கடந்த சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், எல்.கே.ஜி. யு.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தற்போது சுமார் 550 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

அதிகாரிகள் பலர் பங்கேற்பு
இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் நே.சிற்றரசு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள் முனைவர் கண்ணப்பன், முனைவர் பழனிச்சாமி, முனைவர் பூ.ஆ, நரேஷ், அரசு உயர் அலுவலர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.






















