Good Bad Ugly Teaser: இதான் ஃபேன்பாய் சம்பவம்.. ஆதிக் ரவிச்சந்திரனை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அஜித் ரசிகர்கள் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Good Bad Ugly Teaser: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி.
குட் பேட் அக்லிக்கு வரவேற்பு
அஜித்குமார் விடாமுயற்சி படம் நடித்துக் கொண்டிருந்தபோதே ஒப்பந்தமான திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தைக் காட்டிலும் குட் பேட் அக்லி படத்தின் மீதே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் அந்த படத்தில் அஜித்தின் தோற்றமும், அவரது கெட்டப்பும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தாங்கள் நினைத்தது போல அஜித்தை பார்த்ததாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு:
இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். குட் பேட் அக்லி படத்தின் டீசர் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 16 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த டீசரில் அஜித் அவரது மாபெரும் வெற்றிப் படங்களான பில்லா, அமர்க்களம், தீனா கெட்டப்-களில் வருவது போன்ற காட்சிகள் இருந்தது. மேலும், ரெட் படத்தில் அஜித்தின் பஞ்ச் வசனமான அது என்பதும் இடம்பெற்றிருந்தது.
இளமை, நடுத்தர வயது தோற்றத்தில் அஜித்தின் இந்த கெட்டப்புகள் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆதிக் ரவிச்சந்திரனை பாராட்டி வருவதுடன் இதுதான் உண்மையான ஃபேன்பாய் சம்பவம் என்றும் பாராட்டி வருகின்றனர்.
ரிலீஸ் எப்போது?
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் சுனில், பிரசன்னா, அர்ஜுன்தாஸ் ஆகிய பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கேங்ஸ்டர் திரைக்கதை பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த வெற்றி, படத்திற்கும் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆதிக் ரவிச்சந்திரன் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பின்பு, அவர் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கினார். பின்னர், பகீரா படத்தை இயக்கியிருந்தார். இவர் கடைசியாக இயக்கிய மார்க் ஆண்டனி படம் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

