Zika Virus: இந்தியாவில் பரவும் ஜிகா வைரஸ்.. அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன? எப்படி தற்காத்துக்கொள்ளலாம்..
மும்பையின் செம்பூரில் ஜிகா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டதை மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உறுதி செய்துள்ளது.
மும்பையின் செம்பூரில் ஜிகா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை பிரிஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) உறுதிப்படுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்திய 79 வயது முதியவர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் மேற்கு நைல் வைரஸ் போன்ற நோய்களைப் பரப்புவதற்கும் காரணமான ஏடிஸ் ஈஜிப்டி கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுகிறது.
ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்றாலும், சிலருக்கு காய்ச்சல், அழற்சி, மூட்டு வலி, கான்ஜுன்க்டிவிடிஸ் மற்றும் தசை வலி போன்றவை ஏற்படலாம். முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற நோயால் பாதுக்கப்பட்டவர்கள், நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள், டயாலிசிஸ் தேவைப்படுபவர்கள் மற்றும் எச்.ஐ.வி. உள்ளவர்கள் குறிப்பாக கடுமையான நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அல்லது தொற்று தொடர்ந்தால், ஜிகா வைரஸ் உறுப்பு செயலிழப்பு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வலிப்புத்தாக்கங்கள், மன நிலையில் மாற்றங்கள், மூளையழற்சி மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளும் வெளிப்படும்.
இந்தியாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. 2021 ஆம் ஆண்டில், கேரளாவைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டில், மகாராஷ்டிராவின் பெல்சார் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டில், தலசரியில் உள்ள ஒரு அரசு குடியிருப்புப் பள்ளியில் படித்த 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் நோயாகும், இந்த நோயின் தாக்கம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ், டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதற்கு காரணமான ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது.
ஜிகா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவை. ஆனால் ஒரு சிலருக்கு காய்ச்சல், அழற்சி, மூட்டு வலி மற்றும் கான்ஜுன்க்டிவிடிஸ் (சிவப்பு கண்கள்) ஆகியவை தென்படலாம். பல பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உணராமல் இருக்கலாம், ஏனெனில் அறிகுறிகள் மற்ற பொதுவான நோய்களுக்கு ஏற்படுவது போலவே இருக்கும். இருப்பினும், பிறந்த குழந்தைகளில், குறிப்பாக மைக்ரோசெபாலி (சிறிய தலை) பிறப்பு குறைபாடுகளுடன் வைரஸின் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஜிகா வைரஸ் பரவுவதை நிர்வகிப்பதில் தடுப்பு நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, கொசுக் கடியைத் தவிர்ப்பது அவசியம். பூச்சி விரட்டியைப் பயன்படுத்துவதன் மூலமும், நீண்ட கை கொண்ட ஆடைகளை அணிவதன் மூலமும், கொசு வலையை பயன்படுத்துவதன் மூலமும் இதனை தவிர்க்கலாம். குறிப்பாக ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் அதிகமாக தென்படும். கொசுக்கள் பெருகும் இடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது மற்றொரு முக்கிய தடுப்பு நடவடிக்கையாகும்.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )