Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
'திருச்சி எம்.பியான பிறகு, திமுக எம்.பிக்கள், கூட்டணி கட்சியினருடன் நெருக்கமாவதைவிட டெல்லி பாஜக தலைவர்களிடம் நெருக்கமாவதில்தான் துரைவைகோ கவனம் செலுத்தியுள்ளார்’

திமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றார் வைகோ. அவரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை திமுக கொடுக்கும் என்று நம்பியிருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. இருப்பினும், திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கும் அவரின் மனநிலையை மாற்றும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார் அவரது மகன் துரை வைகோ.
வலிமையான தலைவரா துரை ?
துரை வைகோ மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையிலும் மதிமுகவின் அடுத்த முகமாக அவரை வளர்த்தெடுக்க நினைத்தார் வைகோ. ஆனால், கள அரசியல் புரியாமல் பல இடங்களில் சொதப்பி தள்ளினார் துரை. ஒரு அரசியல் தலைவருக்கு அழகு அவரின் கம்பீரம்தான். ஆனால், நாடாளுமன்ற தேர்தலின்போது அமைச்சர் கேன்.என்.நேரு முன்னிலையிலேயே எமோஷனல் ஆகி, கண்ணீர் வடித்தார் துரை. வைகோ கண்ணீர் வடித்தால் அதற்கு வலிமை உண்டு. ஆனால், துரை வடித்த கண்ணீர் கானல் நீர்போன்றது. அதற்கு எந்த வலிமையும் கிடையாது. அது அவரின் பலவீனத்தையே பறைசாற்றியதாக அப்போதே மதிமுக தொண்டர்கள் பேசிக்கொண்டனர். அங்குமட்டுமின்றி இன்னும் சில இடங்களிலும் அவர் அழ, அட என்னப்பா இது ? என தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டார்கள். இப்போது, மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது துரோகி பழி சுமத்தப்பட்டு அவரை வெளியேற்றும் முயற்சி நடக்கிறது. இதற்கு காரணமும் துரை வைகோதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கட்சியையும் சொத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டம்
மதிமுகவிற்கு என்று பல இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன. கட்சி நிதி இருக்கிறது. அதுமட்டுகின்றி பல மாவட்டங்களில் சொந்த கட்டடத்தில்தான் கட்சி அலுவலகமே இயங்குகிறது. இத்தனையையும் வைகோவிற்கு பிறகு வேறு ஒரு நபருக்கு தூக்கிக் கொடுக்க துரையால் முடியவில்லை. அதனால், அவருக்கு போட்டி என்று நினைத்தவர்களையெல்லாம் சரிக்கட்டினார் துரை. அவர் சரிக்கட்ட முடியாத ஒரே நபர் மல்லை சத்யா. அதனால்தான் அவருக்கு இப்போது துரோகி என்ற பட்டம். அதுவும் அந்த பட்டத்தை வைகோவை வைத்தே கொடுக்க வைத்திருக்கிறார் துரை. மல்லை சத்யாவை மட்டும் வெளியேற்றிவிட்டால் மொத்த கட்சியும், கட்சி சொத்துக்களும் தன்னிடமே இருக்கும் என்பது துரையின் கணக்கு.
கள அரசியல் புரியாத துரை – அமைச்சராக ஆசை
நெடுநாள் வரை அரசியல் பக்கமே தலைக்காட்டாமல் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த துரை வைகோ, திடுதிப்பென்று அரசியலுக்கு நுழைந்ததால் அவருக்கு கள எதார்த்தமும், தொண்டர்களின் மனநிலையும், நிர்வாகிகளின் எண்ண ஓட்டமும் கொஞ்சமும் புரிந்தப்பாடில்லை என்பது மதிமுக கட்சியினரின் கவலை. அதனால்தான் அடுக்கடுக்கான நிர்வாகிகள் மதிமுகவை விட்டு வெளியேறின. ஆனால், எது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் துரை, இப்போதே மத்திய அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
திருச்சி எம்.பியான நிலையில், அவர் திமுகவுடனும் கூட்டணி கட்சியினருடனும் நெருக்காமவதைவிட டெல்லி பாஜக தலைவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளதான் அதிகம் மெனக்கிட்டிருக்கிறார். அதனால்தான், மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து வைகோ ஓய்வு பெறும் நாளில், எங்கள் பாஜக கூட்டணிக்கு வந்தால் ,வைகோ மீண்டும் எம்.பி ஆகலாம் என்று ஒபனாக பேசினார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. அது வெளிப்படையாக பார்த்தால் வைகோவிற்கு விடுத்த அழைப்பு மாதிரி இருக்கும். ஆனால், அது முழுக்க, முழுக்க துரை வைகோவின் ஏற்பாடு என்பதுதான் டெல்லி வட்டாரங்கள் சொல்வது.
திமுக கூட்டணியை முறிக்க துரை முயற்சி ?
தன்னுடைய தந்தைக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் திமுக தரவில்லை என்பதை காரணமாக வைத்து திமுக கூட்டணியை முறித்துக்கொள்ளும் ஏற்பாடுகளில் துரை வைகோ இறங்கியுள்ளதாகவும், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மத்திய அமைச்சர் ஆகும் திட்டத்துடன் அவர் காய்நகர்த்தி வருகிறார் என்றும் பரபரப்பும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதனையறிந்த மதிமுகவினரோ, துரை வைகோ மட்டும் மத்திய அமைச்சர் ஆகவேண்டும், களத்தில் உழைக்கும் நாங்கள் சட்டமன்றத்திற்கு போக வேண்டாமா? என தங்களுக்குள் பேசிவருகின்றனர். இதையே வெளியில் பேசினால் இன்னொரு மாத்தையா என்ற பட்டம் வந்துவிடுவோமோ என்றும் அவர்கள் அஞ்சிக்கிடக்கிறார்கள்.
ஆனால், துரையின் ஆசைக்காக திமுகவுடன் கூட்டணியை இந்த முறை முறித்துக்கொள்ள சம்மதிப்பாரா வைகோ என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி !






















