PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
PM Modi Tamilnadu Visit: ஆகஸ்ட் 26ஆம் தேதி கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டுக்குப் பிரதமர் மோடி வருகை தந்த நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் பயணம், அரசியல் நோக்கில் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளது.
ஜூலை 26-ல் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி
கடந்த ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, விமான நிலைய விரிவாக்க விழாவில் கலந்துகொண்டார். மேலும் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின்பரிமாற்ற அமைப்புக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூ.4,500 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு புதிய திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து கங்கை கொண்ட சோழபுரம் சென்றார். ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்பு நாணயங்களை வெளியிட்டார். சின்மயா மிஷன் சார்பில் தமிழில் பகவத் கீதை இசைத்தொகுப்பையும் பிரதமர் வெளியிட்டார்.
கடலூர், திருவண்ணாமலைக்கு வரும் பிரதமர் மோடி
இந்த நிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிதம்பரம் நடராசர் கோயிலில் இருந்து நேரலையில் மான் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

செப்டம்பர் மாதத்திலும் வரத் திட்டம்?
அதேபோல செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வருவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
இன்னும் 8 மாதங்களில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காகப் பிரதானக் கட்சிகளாக திமுக, அதிமுக ஆகியவையும் பிற கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளும் மும்முரமாகத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியின் பயணம், அரசியல் நோக்கில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.





















