Richard Rishi: யாஷிகாவுடன் காதலா? - அதிர்ச்சி கொடுக்கும் நடிகர் அஜித்தின் மச்சான்.. வைரலாகும் புகைப்படம்..!
பிரபல நடிகை யாஷிகா ஆனந்துடன், நடிகர் ரிச்சர்ட் ரிஷி இருக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
பிரபல நடிகை யாஷிகா ஆனந்துடன், நடிகர் ரிச்சர்ட் ரிஷி இருக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
ரிச்சர்ட் ரிஷியின் வளர்ச்சி
தமிழ் சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் இடையேயான காதலும், காதல் வதந்திகளும் ஒன்று புதிததல்ல. அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி. இவர் நடிகை ஷாலினியின் சகோதரர் ஆவார். அஞ்சலில் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரிச்சர்ட் ரிஷி, 2002 ஆம் ஆண்டு காதல் வைரஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கூத்து படம் ரிச்சர்ட்டுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் அதன்பிறகு கிரிவலம், யுகா, நாளை, பெண் சிங்கம், நேரெதிர், நினைத்தது யாரோ, அதிபர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் எந்த படம் அவருக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. ஆனால் தொடர்ந்து சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க முயற்சித்து வந்தார்.
View this post on Instagram
இந்த நிலையில் தான், 2016 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை படம் அவருக்கான கம்பேக் படமாக அமைந்தது. தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு திரௌபதி, 2021 ஆம் ஆண்டு ருத்ர தாண்டவம் என அடுத்தடுத்து ஹீரோவாக வெற்றிப் பெற்று வருகிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் ரிச்சர்ட் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் ரிச்சர்ட் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
பற்ற வைத்த இன்ஸ்டாகிராம் புகைப்படம்
அதில் சூரிய ஒளி கண்ணை கூசும் அளவுக்கு அடிக்க, அதன் முன்னே ஒரு பெண் ரிச்சர்டுக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. உடனடியாக யார் அந்த பெண் என்ற கேள்வி இணையவாசிகள் இடையே எழுந்தது. இந்த கேள்விக்கான விடையை அடுத்த சில மணி நேரத்தில் ரிச்சர்ட் ரிஷி மீண்டும் ஒரு புகைப்படம் வழியாக தெரிவித்தார். அதில் இளம் நடிகை யாஷிகாவுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதில் ”After the sun kiss” என்ற கேப்ஷன் இடம் பெற்றிருந்தது.
வதந்தி உறுதியாகிறதா?
இதனைப் பார்த்த ரசிகர்கள் ரிச்சர்ட் - யாஷிகா இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்களா? இல்லை ஏதேனும் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்களா? என தெரியாமல் குழம்பியுள்ளனர். அதேசமயம் ஏற்கனவே ரிச்சர்ட் ரிஷி இளம் நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. அவர் யாஷிகா தானா? என கேள்வியெழுப்பியுள்ளனர். சிலர் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.