National Film Awards 2023 : தேசிய விருது பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் மலையாளத் திரைப்படங்கள்...! முழு விபரம்!
பெரும்பாலான பிரிவுகளின் கீழ் மலையாளத் திரைப்படங்கள் நிறைந்திருக்க தேசிய விருதுகளுக்கு தேர்வாகியிருக்கும் பிற மொழிப் படங்களைப் பார்க்கலாம்!
2021ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலில் பெரும்பாலான பிரிவுகளில் மலையாளத் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழைத் தவிர்த்து விருதுகளுக்கு தேர்வாகியுள்ள பிற மொழிப் படங்களை மற்றும் நடிகர்களைப் பார்க்கலாம்.
அலியா பட்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய கங்குபாய் திரைப்படத்தில் நடித்த அலியா பட் தனது நடிப்பிற்காக எக்கசக்கமான பாராட்டுக்களை ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் தற்போது சிறந்த நடிகைக்கான பிரிவின் கீழ் அலியா பட் தேர்வாகி இருக்கிறார். மற்ற நடிகர்களும் போட்டியாளர்களாக இருந்தாலும் தேசிய விருதை தட்டிச் செல்லக்கூடிய வாய்ப்பு அலியாவுக்கு அதிகமாக இருக்கின்றன.
கங்கனா ரனாவத்
சிறந்த நடிகையருக்கான போட்டிப் பிரிவில் அலியா பட்டுக்கு சவால் விடும் வகையில் நிற்கிறார் நடிகை கங்கனா ரனாவத். தலைவி படத்தில் இவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது.
ஜோஜு ஜார்ஜ்
ஷாஹி கபீர் திரைக்கதை எழுதி மார்ட்டின் பிரக்கட் இயக்கிய ‘நயட்டு’ திரைப்படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்தார். தற்போது சிறந்த நடிகருக்கான பிரிவின் கீழ் நயட்டு படத்திற்காக தேர்வாகியுள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.
எம்.எம் கீரவாணி
ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி சிறந்தப் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தற்போது சிறந்தப் பாடலுக்கான பிரிவின் கீழ் தேசிய விருதை தட்டிச்செல்லக் காத்திருக்கிறார்.
மின்னல் முரளி
பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் மின்னல் முரளி. ஸ்பைடர்மேன் , சூப்பர்மேன் போல் உள்ளூர் சூப்பர் ஹீரோ கதை ஒன்றை எடுத்து அதை வெற்றிப்படமாகவும் ஆக்கினார் பாசில் ஜோசப். சிறந்த படம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது மின்னல் முரளி. மற்றொரு மலையாளத் திரைப்படமான மேப்படியான படமும் பல்வேறு விருதுகளின் கீழ் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன்
சுகுமாரன் இயக்கத்தில் புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான பிரிவுகளின்கீழ் தேர்வாகியுள்ளார். புஷ்பராஜ் தேசிய விருதை வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
மேலும் படிக்க :National Film Awards 2023 LIVE: 69வது தேசிய விருதுகள்...இந்த ஆண்டு எந்தெந்த படங்களுக்கு வாய்ப்பு?