இலங்கை அகதிகளுக்கு போலி பாஸ்போர்ட் தயாரிப்பு; தஞ்சையில் 6 பேர் கைது
இந்த மோசடிக்கு பின்னணியில் சேதுபாவாசத்திரம் பகுதியில் பணியாற்றி ஓய்வு பெற்ற போஸ்ட்மேன் பக்ருதீன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
தஞ்சாவூர்: போலி பாஸ்போர்ட் தயாரித்து இலங்கை அகதிகளுக்கு வழங்கியதாக தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எழுத்தர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து இதுகுறித்து ரகசிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து க்யூ பிரிவு டி.எஸ்.பி., சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான 10 பேர் கொண்டு குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஆண்டிக்காடு போஸ்ட் ஆபிசில், போஸ்ட்மேனாக பணியாற்றும் கோவிந்தராஜ் (64) என்பவர் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வடிவேல் (52), ராஜமடம் பகுதியை சேர்ந்த சங்கர் (42) என்பவரிடம் போலி பாஸ்போர்ட்டுகளை விநியோகம் செய்வதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடந்த 12ம் தேதி இரவு க்யூ பிராஞ்ச் போலீசார் அதிரடியாக கோவிந்தராஜ், வடிவேல் மற்றும் சங்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் தங்களுக்கு தெரிய வந்த தகவல் உண்மை என்று தெரிய வந்ததும் 3 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து போஸ்ட்மேன் கோவிந்தராஜிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரண மேற்கொண்டனர். இதில வடிவேல், சங்கர் இருவரும் கூறும் முகவரிக்கு வரும் பாஸ்போர்ட் போலியானது. அதை தங்களிடம் கொடுக்க வேண்டும் என கூறியதன் அடிப்படையில் கோவிந்தராஜ் கொடுத்துள்ளார். இது போல இந்தாண்டு மட்டும் சுமார் 38 போலி முகவரியுடைய பாஸ்போர்ட்டுகளை கொடுத்துள்ளார். இதற்காக பாஸ்போர்ட் ஒன்றுக்கு தலா ஆயிரம் ரூபாய் பணத்தையும் தான் பெற்றுக்கொண்டதை போஸ்ட்மேன் கோவிந்தராஜ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் வடிவேல் மற்றும் சங்கரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இதில் திருச்சி துறையூரை சேர்ந்த சுந்தர்ராஜ், வைத்தியநாதன் 52. ஆகியோருடன் இணைந்து போலியான ஆதார், வாக்காளர் அட்டை, ஸ்கூல் டி.சி., உள்ளிட்ட போலிச் சான்றிதழ்களை தயாரித்துள்ளனர். பின்னர் கும்பகோணம் மகாமகக்குளம் அருகில் உள்ள சரண் பிரவுசிங் சென்டர் நடத்திவரும் ராஜூ (31), என்பவர் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பம் செய்துள்ளனர். பாஸ்போர்ட் விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நபர் வர வேண்டும் என்பதால் அதை செய்ய முடியாத காரணத்தால் சேதுபாவாசத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எழுத்தர் ஷேசா மூலம் பாஸ்போர்ட் விசாரணையின் போது, பாஸ்போர்ட் பெறும் சம்பந்தப்பட்ட நபரை காண்பிக்காமல் போலீஸ் விசாரணையை முடித்துள்ளனர்.
இதற்காக பாஸ்போர்ட் விசாரணை செய்து ஆன்லைனில் விண்ணப்பத்தை அனுப்புவதற்காக எழுத்தர் ஷேசா சொந்த செலவில் பாலசிங்கம் (36) என்பவரை நியமித்துள்ளது தெரியவந்தது. இவ்வாறு இலங்கை தமிழர்கள், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்வதற்காக 38 பேருக்கு பாஸ்போர்ட் பெற்று விநியோகம் செய்துள்ளனர். இந்த மோசடிக்கு பின்னணியில் சேதுபாவாசத்திரம் பகுதியில் பணியாற்றி ஓய்வு பெற்ற போஸ்ட்மேன் பக்ருதீன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த திடுக்கிடும் தகவல்கள் போலீசார் விசாரணையில் வெளி வந்துள்ளது. இதையடுத்து போலீஸ் எழுத்தரான ஷேசா, போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் திருச்சியை துறையூரை சேர்ந்த சுந்தரராஜ், பக்ருதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பாலசிங்கம், வைத்தியநாதனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.