குழாயில் தண்ணீர் வர்ல.. தொட்டியில் அடைத்திருந்த குழந்தை சடலம்.. தஞ்சாவூரில் பரபரப்பு!
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை சடலம் காணப்பட்டது. குழந்தையின் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![குழாயில் தண்ணீர் வர்ல.. தொட்டியில் அடைத்திருந்த குழந்தை சடலம்.. தஞ்சாவூரில் பரபரப்பு! Tanjore newborn baby was found in toilet of Thanjavur Medical College Hospital குழாயில் தண்ணீர் வர்ல.. தொட்டியில் அடைத்திருந்த குழந்தை சடலம்.. தஞ்சாவூரில் பரபரப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/05/38515d708d93f379b5ef35d92036c773_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வெளிமாவட்ட மற்றும் வெளியூரிலிருந்து 1000 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும், வெளிபுற நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் இரவு பகல் முழுவதும் மருத்துவமனை வளாகம் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் 300 படுக்கை கொண்ட வார்டு அருகே அவசர சிகிச்சை பிரிவு செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவறை சுத்தம் செய்ய காலை துப்புரவு ஊழியர்கள் சென்றனர்.
அப்போது அங்கிருந்த ஒரு கழிவறையில் தண்ணீர் வரவில்லை. இதையடுத்து கழிவறைக்கு தண்ணீர் வரும் சிறிய பிளாஸ்டிக் தொட்டியை திறந்து பார்த்த போது அதில் ஒரு குழந்தையின் சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிறந்த சில மணி நேரங்கள் ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது.
இது குறித்து துப்புரவு ஊழியர்கள் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீஸ் டிஎஸ்பி கபிலன், மருத்துக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த குழந்தையின் உடல் கழிவறை தொட்டிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து மருத்துவமனையில் உள்ளவர்கள் கூறுகையில், மகப்பேறு மருத்துவமனை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. அங்கு பிறந்த குழந்தைகள் முதல் குறிப்பிட்ட வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்று அம்மருத்துவமனை இயங்கி வருகின்றது. ஆனால் மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் மகப்பேறு பிரிவு கிடையாது. ஆனால் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை, கழிவறைக்கு செல்லும் சிறிய தண்ணீர் தொட்டியில் அமுக்கி வைத்திருப்பது கொடூரமான செயலாகும். தனக்கு பிறந்த குழந்தையை மறைக்க முடியாததால், பிறந்தவுடன், குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்திருக்கலாம். தற்போது அந்த வார்டுக்குள் இருக்கும் சிசிடிவி கேமராவை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதில் ஒரு பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவரை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிறந்த பெண் குழந்தையை தண்ணீர் முழ்கடித்து கொலை செய்த சம்பவம் மருத்துவமனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)