Thiruvarur : ”காலை 5 மணிக்கே கிடைக்கும் சரக்கு” ஊராட்சி தலைவியின் கணவருக்கு தொடர்பா..? திருவாரூரில் பரபரப்பு!
”சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படும் இடங்கள் எங்கெங்கு இருக்கின்றன என சாதார மக்களுக்கே தெரியும் நிலையில், இதை கண்காணித்து தடுக்க வேண்டிய காவலதுறைக்கு தெரியாமல் இருப்பது எதனால்?’
திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் மது போதையால் ஏற்படும் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் மதுபான கடை நண்பகல் 12 மணிக்கு திறப்பதற்கு முன்னதாகவே காலை 5 மணிக்கே மதுபானம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது திருவாரூர் மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 மணி வரை காத்திருக்க வேண்டாம் அதிகாலையிலேயே கிடைக்குது சரக்கு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கமலாபுரம் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த அரசு மதுபானக் கடைக்கான பார் உரிமத்தை வேறொருவரின் பெயரில் எடுத்து கமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவி பிரபாவதியின் கணவரும் ஊராட்சி எழுத்தருமான கமலாபுரம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த அமர்நாத் என்பவர் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
மதுபான பாராக மாறிய வாய்க்கால்
இந்த நிலையில் கமலாபுரம் அரசு மதுபான கடையில் பாரில் பணி புரியும் ஊழியர்கள் மூலம் அமர்நாத் பாருக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் வைத்து காலை 5 மணியிலிருந்து கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், அரசு மதுபான கடை பூட்டப்பட்ட பிறகு 10 மணிக்கு மேல் பாரில் அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கைதான அமர்நாத் – தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பது அம்பலம்
கடந்த மே 7ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல் துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கமலாபுரம் பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மதுபானத்தை விற்பனை செய்த தட்சிணாமூர்த்தி என்பவர் மகன் அமர்நாத் வயது 45 என்பவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் இருந்து 55 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விடிவதற்குள்ளேயே போதையில் மூழ்கும் குடும்பத் தலைவர்கள்
இந்த நிலையில் இன்று காலை 5 மணியிலிருந்து பாருக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் அரசு மதுபானங்களை கள்ளச் சந்தையில் ஒருவர் விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்குதான் ஊராட்சி மன்ற தலைவியாக மனைவியை ஆக்கினாரா ? கொந்தளிக்கும் மக்கள்
தனது மனைவி ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் ஊராட்சிலேயே கள்ளச் சந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்யும் ஊராட்சியில் எழுத்தராக அரசு பணியில் இருக்கும் அமர்நாத் என்பவர் மீது அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அவர் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர் அமர்நாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடரும் சட்டவிரோத மது விற்பனையும் குற்றச் செயல்களும்
அரசு மதுபான கடைகள் ஒருபுறம் குடும்பத்தை நிலைகுலைய வைக்கிறது என்றால், கடை மூடப்பட்டாலும் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானங்களை வாங்கி அருந்துவோரால் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அக்கம், பக்கத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
போதையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாத அளவிற்கு ஆட்டம் போடுவது, உடைகளை பொதுவெளியில் களைந்து வீசி ஏறிவது, சாலையில் வருவோர், போவோரை கெட்ட, கெட்ட வார்த்தைகளில் பேசி அடிக்கச் செல்வது என மது பிரியர்களின் அட்டூழியம் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கதையாகி வருகிறது. இப்படியான கேடு, கெட்ட இழி நிலைக்கு செல்வதற்கு காரணமாக இருக்கும் சட்டவிரோத மது விற்பனையை முதலில் போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.
கண்டும் காணாமல் இருக்கிறதா காவல்துறை?
சட்டவிரோதமாக வயல்வெளிகளில், வாய்க்கால் ஓரத்தில் என்று பல இடங்களில் திருவாரூர் மாவட்டத்தில் மதுவிற்பனை படுஜோராக நடைபெறுகிறது. சாதாரண மனிதர்களுக்கே சட்டவிரோதமாக மது எங்கு கிடைக்கும் என்று தெரியும் நிலையில், இதனை கண்காணித்து தடுக்கக் கூடிய காவல்துறையினருக்கு இது தெரியவில்லையா ? அல்லது தெரிந்தும் ஒரு சில காவலர்கள் பணத்தை அவர்களிடம் வாங்கிக் கொண்டு கண்டும் காணாமல் இருக்கிறார்களா என்று பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர்.